📅 Thursday, 27 August 2026 IST | ஆவணி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 26, 2026 04:03 PM

ஹார்முஸ் ஜலசந்தியின் ஒவ்வொரு அங்குலத்தையும் கண்காணிக்கிறோம்: ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

ஹார்முஸ் ஜலசந்தியின் ஒவ்வொரு அங்குலத்தையும் கண்காணிக்கிறோம்: ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தியில் பதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டு விட்டதாகவும், இனி புதிய கண்ணிவெடிகளைப் பதிக்கும் முயற்சிகளில் ஈடுபடும் கப்பல்கள் அல்லது படகுகள் உடனடியாக முழுமையாக அழிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் அரசுக்குக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில் ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், "ஹார்முஸ் ஜலசந்தியின் சர்வதேச கடல் எல்லைப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த அனைத்துக் கண்ணிவெடிகளும் வெற்றிகரமாக அகற்றப்பட்டு அல்லது வெடித்துச் சிதறடிக்கப்பட்டு விட்டதாக அமெரிக்க கடற்படை எனக்கு உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் அப்பகுதியில் புதிதாகக் கண்ணிவெடிகளை வைக்கும் எந்தவொரு கப்பலும் அல்லது படகும் உடனடியாகவும் திட்டமிட்டபடியும் அழிக்கப்படும் என்று ஈரான் அரசுக்குத் தீர்க்கமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளிப் படை மூலமாக ஹார்முஸ் ஜலசந்தியின் ஒவ்வொரு சதுர அங்குலத்தையும், அதேபோல பிக்காக்ஸ் மலை மற்றும் ஏற்கனவே அழிக்கப்பட்ட மூன்று அணு உலை மையங்களையும் நாங்கள் மிகத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். அங்கு கண்ணிவெடிகளைப் பதிப்பதற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மைகொள்கை தற்போது முழு வீச்சில் அமலில் உள்ளது.

அதேநேரத்தில், தோல்வியடைந்து வரும் ஈரான் அரசு, தனது ராணுவத்தின் பெரும் பிரிவினருக்குச் சம்பளம் கூட வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளதோடு, போராட்டத்தில் ஈடுபடாத சாமானிய மக்கள் உட்பட தங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் போராளிகளை இதுவரை கண்டிராத வகையில் கொன்று குவித்து வருகிறது.

இது மிகப்பெரிய அளவிலான ஒரு மனிதநேயப் பேரழிவு என்பதால், இந்த அநியாயம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதற்காக 'ஆப்பரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்' என்ற பெயரிலான கடுமையான பொருளாதாரத் தடைகள் ஈரானுக்கு எதிராக விரைவில் தொடங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.