Hi Day 6 Box Office
சென்னை: கவின், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருக்கும் ஹாய் திரைப்படம் கடந்த மாதம் 28ஆம் தேதி ரிலீஸானது. விஷ்ணு எடவன் இயக்கியிருக்கும் இப்படம் ஓரளவுக்கு விமர்சன ரீதியாக பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் அதன் வசூல் குறித்த விவரங்கள் வெளியாகியிருக்கின்றன. அதிலும் படம் நல்லவிதமான வரவேற்பையே பெற்றிருக்கிறது.
கவின் இப்போது கோலிவுட்டின் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். சின்னத்திரையிலிருந்துதான் அவரது பயணமும் ஆரம்பித்தது. எனவே சிவகார்த்திகேயன், சந்தானம் மாதிரி தானும் ஒரு பெரிய நடிகராக வர வேண்டும் என்ற ஆவலில் கடுமையாக உழைத்துவருகிறார். அப்படி அவர் நடித்த படங்களில் டாடா மெகா ஹிட்டானது. ஆனால் அதற்கு பிறகு அவர் நடித்த நான்கு படங்களும் சரியாக போகவில்லை. இதன் காரணமாக உடனடியாக ஒரு ஹிட் கொடுத்துவிட வேண்டும் என உறுதியாக இருந்தார்.
ஹாய் கவின்: அதன்படி விஷ்ணு எடவன் இயக்கத்தில் ஹாய் படத்தில் நடித்தார். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இவர்களுடன் பிரபு, பாக்யராஜ், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். முதன்முறையாக நயனுக்கு கவின் ஜோடி சேர்ந்திருக்கிறார். அதுமட்டுமின்றி முதன்முறையாக கொங்கு வட்டார வழக்கை பேசியும் அவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடண்டஹ் 28ஆம் தேதி படமானது ரிலீஸானது.
எப்படி இருக்கு படம்?: படத்தின் கதையை பொறுத்தவரை புதுமையான கதையெல்லாம் இல்லை. காலங்காலமாக வந்த கதைதான். இருப்பினும் அதை ப்ரெசன்ட் செய்த விதத்தில் இயக்குநர் தப்பித்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். அதேபோல் கவின் - நயன் கெமிஸ்ட்ரியும் நன்றாகத்தான் இருந்தது. குடும்பத்துடன் சென்று பார்த்துவிட்டு வருவதற்கு ஹாய் படம் பொருத்தமாக இருப்பதாக ரசிகர்கள் கூறினார்கள். இதனால் படத்துக்கு கூட்டம் எதுவும் டல் அடிக்காமல் வந்துகொண்டுதான் இருந்தது.
சக்சஸ் மீட்: ஆகமொத்தம் இந்தப் படம் படுதோல்வியும் இல்லாமல், மெகா வெற்றியும் இல்லாமல் அதற்கு இடைபட்ட இடத்தில் ஓகேயான வெற்றியை பெற்றிருக்கிறது. நான்கு படங்கள் வரிசையாக சொதப்பியதற்கு இந்தப் படத்தின் வெற்றி கவினுக்கு கண்டிப்பாக ஆசுவாசத்தை கொடுத்திருக்கும். நேற்று நடந்த சக்சஸ் மீட்டில்கூட, "ஹாய் படத்தின் நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் எனக்கு பெரிய மகிழ்ச்சி. மாதத்தின் இறுதியில் ஹாய் படம் வெளியானது.
வசூல் விவரம்: ஏற்கனவே படங்கள் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. இருந்தபோதும் ஹாய் படத்துக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவால் வெற்றி கிடைத்திருக்கிறது. அனைவருக்கும் நன்றி" என மகிழ்ச்சியோடு பேசினார். இந்நிலையில் ஆறாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி நேற்று அப்படம் 78 லட்சம் ரூபாயை வசூலித்திருக்கிறதாம்.
மொத்த வசூல்: அதற்கு முந்தைய நாள் 87 லட்சம் ரூபாய் வசூலித்திருந்தது. மொத்தம் ஆறு நாட்களில் அப்படம் எட்டு கோடியே 21 லட்சம் ரூபாயை அள்ளியிருக்கிறதாம். மீடியம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் ஆறு நாட்களில் இவ்வளவு வசூல் செய்திருப்பது கவினுக்கு மார்க்கெட் இருக்கிறது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. நயன் நடிப்பில் இதற்கு சில நாட்கள் முன்பு வெளியான டாக்சிக் படுதோல்வியை சந்தித்தது. அது கவலை கொடுத்த நேரத்தில் ஹாய் படத்தின் வெற்றி அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.