ஈரானுடன் தொடர்பு: சிங்கப்பூர் நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை
ஈரானுக்கு எதிரான உலகளாவிய நிதித் தடைகளைத் தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக சிங்கப்பூரை மையமாக கொண்டு இயங்கும் ‘வெல்பிரெட் கேப்பிடல்’ நிறுவனம் மற்றும் ஐக்கிய அரபு சிற்றரசுகள், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள அதன் வர்த்தக நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது.
ஈரானின் எண்ணெய்க் கப்பல் பிரமுகர் முகம்மது உசேன் ஷம்கானியுடன் தொடர்பில் இருந்த காரணத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தனது இணையத்தளத்தில் அமெரிக்க நிதியமைச்சின் வெளிநாட்டுச் சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
“இந்தக் குழுமத்தின் ஈரானிய வர்த்தகத்துக்கு வெளியே ஷாம்கானியால் ‘வெல்பிரெட்’ நிறுவனம் உருவாக்கப்பட்டது. இருப்பினும், அதன் செயல்பாடுகளுக்கு இறுதிப் பொறுப்பாளர் அவரே,” என்று அது குறிப்பிட்டுள்ளது.
ஏறத்தாழ 60 நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் கப்பல்களை இலக்கு வைத்து இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தத் தடை நடவடிக்கை குறித்து ‘வெல்பிரெட்’ நிறுவனம் உடனடியாக எவ்விதக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
ஈரான் மற்றும் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருள்களை உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு சேர்த்து, பில்லியன் கணக்கான அமெரிக்க டாலர் லாபத்தை இந்த ஷம்கானி தலைமையிலான அமைப்பு ஈட்டித் தருவதாகவும் அமெரிக்க வெளிநாட்டுச் சொத்துக் கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ஈரானிய நிறுவனங்களிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியில் ஈடுபட்ட நான்கு இந்திய நிறுவனங்களுக்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.