இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறி: சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க பிரேமலதா வலியுறுத்தல்
சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் மக்களுக்கு பட்டாக்கள் வழங்கப்படவில்லை.
அதை துறைசார்ந்த அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று உள்ளோம். விஜயகாந்த் பிறந்த நாளில் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு கட்டில், மெத்தை, டிவி, மருத்துவ உபகரணங்கள் வாங்கி கொடுத்தது ஒரு வரலாறு.
இதை எல்லாம் கேப்டனை தவிர வேறு யாரும் செய்தது இல்லை. விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்கள், மருத்துவர் -செவிலியர்கள் பற்றாக்குறையை நீக்க வேண்டும்.
தவெக அரசு 100 நாள்களைக் கடந்துள்ளது. மாற்றம் மாற்றம் என்றார்கள். ஆனால் எந்த மாற்றமும் நிகழவில்லை. கடந்த 4 நாள்களில் 10-க்கும் மேற்பட்ட கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் நடந்துள்ளன.
இதற்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் புழக்கம் மற்றும் கலாச்சார சீரழிவே காரணம்.இளைஞர்கள் ஓட்டுபோட்டு இந்த ஆட்சியைக் கொண்டு வந்துள்ளனர்.
ஆனால், இன்றைக்கு இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது. இதை எல்லாம் கவனத்தில் கொண்டு சட்ட ஒழுங்கு பிரச்சினையை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும்.
கர்நாடகாவில் 3 தமிழர்களை வனத்துறையினர் கொலை செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.