இந்திய அணியில் தேர்வாகாத ’கார்த்திகா’.. No.1 ரைடருக்கு மறுக்கப்பட்ட இடம்! வட இந்திய லாபி காரணமா?
இந்திய அணியில் தேர்வாகாத ’கார்த்திகா’.. No.1 ரைடருக்கு மறுக்கப்பட்ட இடம்! வட இந்திய லாபி காரணமா?
ஆசிய இளைஞர் விளையாட்டில் தங்கம் வென்றும், தேசிய மகளிர் கபடியில் 96 புள்ளிகள் குவித்து அதிக ரைடு புள்ளிகள் பெற்றும், கண்ணகி நகர் கார்த்திகா ஆசிய விளையாட்டு இந்திய அணியில் இடம் பெறாதது சர்ச்சை கிளப்பியுள்ளது. ஹரியானா, ரயில்வே, இமாச்சல வீராங்கனைகள் அதிக அளவில் தேர்வாக, பதக்கம் வென்ற தமிழ்நாட்டில் இருந்து ஒருவரும் இல்லாதது வடஇந்திய லாபி குற்றச்சாட்டை தீவிரப்படுத்துகிறது.
2025-ம் ஆண்டு பஹ்ரைனில் நடந்த ஆசிய இளைஞர் விளையாட்டு போட்டிகளில் இந்திய மகளிர் கபடி அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தது. இந்த சாதனையில், கண்ணகி நகர் கார்த்திகா துணை கேப்டனாக செயல்பட்டு இந்தியா அணி வெற்றி பெறுவதில் பெரும் பங்கு வகித்தார்.
தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற மகளிர் சீனியர் தேசிய கபடித் தொடரில் தமிழ்நாடு அணி வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தது. இந்த தொடரில் கார்த்திகா 81 ரைடு புள்ளிகளும், 16 டேக்கிள் புள்ளிகளும் என மொத்தம் 96 புள்ளிகளைக் குவித்து அசத்தினார். அதோடு இந்த தொடரில் அதிக புள்ளிகள் குவித்த ரைடர் என்ற பெருமையையும் பெற்றார். தொடர்ந்து தனது சிறப்பான செயல்பாடு காரணமாக அவருக்கு விரைவில் இந்திய அணியில் இடம்கிடைக்கும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், சமீபத்தில் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் கார்த்திகாவுக்கு இடம் வழங்கப்படவில்லை. மகளிர் சீனியர் தேசிய கபடித் தொடரில் அதிக புள்ளிகள் குவித்த ரைடருக்கு இந்திய அணியில் இடம்கிடைக்காதது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. அதே நேரம் முதல் ஐந்து ரைடர்கள் பட்டியலில் கூட இடம்பிடிக்காத புஷ்பா, சோனாலி ஆகிய வீராங்கனைகளுக்கு அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த வீராங்கனைகளை விட சுமார் 30 ரைட் புள்ளிகளுக்கும் அதிகம் எடுத்தும் கார்த்திகாவுக்கு அணியில் இடம் மறுக்கப்பட்டுள்ளது.
மேலும், மகளிர் சீனியர் தேசிய கபடித் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஹரியானா அணியில் இருந்து 4 வீராங்கனைகளும், வெள்ளி வென்ற ரயில்வே அணியில் இருந்து 4 வீராங்கனைகளும், வெண்கலம் வென்ற இமாச்சல பிரதேசம் அணியில் இருந்து 3 வீராங்கனைகளுக்கு இந்திய அணியில் இடம்கிடைத்துள்ளது. அதே நேரம் வெண்கல பதக்கம் வென்ற மற்றொரு அணியான தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் கூட இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.
பொதுவாகவே இந்திய அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அரிதாகவே இடம்பெறுவார்கள். பெரும்பாலும் ஹரியானா, உத்தரபிரதேசம், பஞ்சாப், இமாச்சல பிரதேசம் ஆகிய வடஇந்திய வீரர், வீராங்கனைகளுக்கே இந்திய அணியில் இடம் கிடைக்கும்.
இதற்கு முக்கிய காரணமாக தேசிய அளவிலான போட்டிகளில் தென்மாநில அணிகள் வெற்றிபெறாததே கூறப்படும். ஆனால், இந்த முறை தமிழ்நாடு அணி வெண்கலம் வென்றுள்ள போதும், ஒரு வீராங்கனை கூட இந்திய அணியில் இடம்பெறாததற்கு வட இந்திய லாபியே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மேலும் தமிழ்நாடு கபாடி சங்கமும் தகுதி இருந்தும், உரிய முறையில் போராடி தனது வீராங்கனைகளுக்கு இந்திய அணியில் இடம் வாங்கி தரவேயில்லை என்றும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.