📅 Tuesday, 25 August 2026 IST | ஆவணி 9, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 25, 2026 01:03 AM

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது: முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்ன?

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது: முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்ன?

சட்டப்பேரவையில் நேற்று 110-வது விதியின்கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசிய முதல்வர் விஜய்.

சென்னை: பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கைவிடப்படும்என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

பேரவையில் 110-வது விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை முதல்வர் விஜய் நேற்று வெளியிட்டார். அதன் விவரம்: இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால் இயக்கப்படும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் ஆண்டுக்கு 3 கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக உள்ளது.

வளர்ந்துவரும் சென்னை மாநகரத்தின் தேவை, பயணிகள் வசதி, தொழில் வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டும், சரக்குப் போக்குவரத்தை அதிகரிக்கவும் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான தேவை ஏற்பட்டுள்ளது. அதற்கு தேர்வு செய்யப்படும் இடம் பெரிய அளவில் விவசாயிகளை பாதிக்காத, அதிக அளவில் குடியிருப்புகளை அகற்றாத வகையில் அமைய வேண்டும்.

ஆனால், முந்தைய அரசு விவசாயிகளை பெரிய அளவில் பாதிக்கும் வகையிலும், குடியிருப்புகளை அதிக அளவில் அகற்றும் வகையிலும் விமான நிலையத்தை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் மற்றும் இதர கிராம மக்கள் இந்த விமான நிலையம் அமைப்பதை எதிர்த்து நடத்திய போராட்டங்களை அறிந்து, நான் கடந்த 2025 ஜன.20-ம் தேதி அங்கு சென்று, மக்களின் குறைகளைக் கேட்டறிந்தேன்.

பின்னர், ‘‘சென்னை பரந்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 12 கிராமங்களில் அமைய இருக்கும் விமான நிலையத்தை எதிர்த்துப் போராடும் மக்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன். நீண்ட நாட்களாக இத்திட்டத்துக்கு எதிராகப் போராடிவரும் விவசாயிகளுக்கு எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விக்கிரவாண்டியில் கடந்த 2024 அக்டோபரில் நடந்த பொதுக் கூட்டத்திலேயே, பரந்தூர் விமான நிலையத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளேன். தொழில் வளர்ச்சி மற்றும் அதில் விமான நிலையங்களின் பங்குபற்றி நான் நன்கு அறிவேன்.

எனினும், பரந்தூரில் இத்திட்டம் அமையக் கூடாது. அரசு இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காமல், விவசாய நிலங்கள் அதிக அளவில் பாதிக்கப்படாத வகையில் மாற்று இடம் தேர்வு செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தேன்.

இந்த நிலையில், புதிய விமானநிலையம் அமைப்பது குறித்து உயர் அதிகாரிகள், துறை வல்லுநர்களிடம் விரிவாக ஆலோசனை நடத்தினேன். ஏற்கெனவே நான் உறுதி அளித்தபடி, பரந்தூரில் புதியவிமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்த அரசால் கைவிடப்படும்.

மாற்று இடங்கள் தேர்வு: துறை வல்லுநர்கள், கல்வியாளர்களிடம் கலந்துபேசி, விவசாய நிலங்கள், குடியிருப்புகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாதவாறு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பொருத்தமான சில மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த இடங்களின் தொழில்நுட்ப ரீதியான சாத்தியக்கூறுகளை விரிவாக ஆய்வு மேற்கொண்டு புதிய விமான நிலையத்துக்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும்.

புதிதாக 5-வது முனையம்: இதற்கிடையே, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்து, அதன் வடமேற்குப் பகுதியில் ஆண்டுக்கு கூடுதலாக 2 கோடிபயணிகளைக் கையாளும் வகையில் புதிதாக 5-வது பயணிகள் முனையம் மற்றும் அதற்கான அணுகுசாலை, மேம்பாலம் அமைக்க இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நடந்து வரும் 3-வது பயணிகள் முனையம் கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகு, ஆண்டுக்கு 3.50 கோடி பயணிகளைக் கையாளக்கூடியதாக இருக்கும்.

அந்த முனையம் செயலாக்கத்துக்குப் பிறகு, ஆண்டுக்கு மொத்தம் 5.50 கோடி பயணிகளைக் கையாளக்கூடியதாக இந்த விமானநிலையம் இருக்கும். இதன்மூலம், சென்னை விமானநிலைய சேவைகள் மேம்படுத்தப்படுவதோடு, புதிய விமான நிலையம் அமையும் வரை பயணிகளின் போக்குவரத்து தேவை பூர்த்தி செய்யப்படும்.

குடும்பத் தலைவிகள் பயன்பெறும் வகையில் முதல்கட்டமாக ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தில் ஆண்டுக்கு 3 எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். மகளிர் இலவச பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, பெருமளவில் பயனளிக்கும் விதமாக, ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில், தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாளான அக்.2-ம் தேதி முதல் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

குடும்பத் தலைவிகள் பயன்பெறும் வகையில், ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தில் முதல்கட்டமாக ஆண்டுக்கு 3 எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். பயனாளிகள் பதிவு செய்து, சிலிண்டரை பெற்றவுடன், சிலிண்டருக்கான விலை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் உள்ள, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சிறு, குறு விவசாயிகள், மாற்றுத் திறனாளிகள் உட்பட நலிந்த நிலையில் உள்ள சுமார் 1 கோடியே 30 லட்சத்து 16 ஆயிரத்து 104 குடும்பங்கள் பயனடையும். இத்திட்டம் வரும் பொங்கல் பண்டிகை (ஜனவரி 2027) முதல் செயல்பாட்டுக்கு வரும். இத்திட்டத்துக்காக ஆண்டுதோறும் சுமார் ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.

‘வெற்றிப் பயணம்’ திட்டம்

மகளிர் இலவச பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில், மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாளான அக்.2 முதல் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, மாநகரம், நகரங்களில் சாதாரணப் பேருந்துகள் மட்டுமின்றி எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் அரசுப் பேருந்துகளிலும், மகளிர் இலவசமாக பயணிக்கலாம்.

கூடுதலாக, மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாகபுறநகர் மற்றும் மலைப் பகுதிகளில், சாதாரணகட்டணப் பேருந்துகளிலும், மகளிர் இலவசமாகப் பயணிக்கலாம். இதற்கு வருமான உச்சவரம்போ, பயண எண்ணிக்கையிலோ கட்டுப்பாடு இல்லை. திருநர்களும் (Transgender) இலவசமாக பயணிக்கலாம். இதை செயல்படுத்த ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் கோடி செலவினம் ஏற்படும்.