📅 Friday, 14 August 2026 IST | ஆடி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 14, 2026 09:03 AM

“இந்திய டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடிக்கணும்னா..”.. தேவ்தத் படிக்கலுக்கு ரகானே முக்கிய அறிவுரை

“இந்திய டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடிக்கணும்னா..”.. தேவ்தத் படிக்கலுக்கு ரகானே முக்கிய அறிவுரை

“இந்திய டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடிக்கணும்னா..”.. தேவ்தத் படிக்கலுக்கு ரகானே முக்கிய அறிவுரை

மும்பை: இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 15 அன்று காலே மைதானத்தில் தொடங்க உள்ளது. பேட்டிங் வரிசையில் 3-வது இடத்தில் களம் இறங்கவுள்ள தேவ்தத் படிக்கலுக்கு, இந்திய அணியின் முன்னாள் துணைக் கேப்டன் அஜிங்க்யா ரகானே சில முக்கிய ஆலோசனைகளையும் எச்சரிக்கையையும் வழங்கியுள்ளார்.

ஆட்டத்தின் ஆரம்பக் கட்டத்தில் கவனமாக விளையாடினால், டெஸ்ட் அணியில் தனது இடத்தை தேவ்தத் படிக்கல் நிரந்தரமாக்கிக் கொள்ள முடியும் என்று ரகானே கூறி உள்ளார். இந்தியா ஏ சுற்றுப்பயணத்தின் போது சாய் சுதர்சனுக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் தேவ்தத் படிக்கலுக்கு இந்த அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

இது குறித்துத் தனது யூடியூப் சேனலில் பேசிய ரகானே, "இலங்கை ஆடுகளங்கள் தேவ்தத் படிக்கலின் பேட்டிங் முறைக்கு மிகவும் சாதகமாக இருக்கும். அவர் 3-வது இடத்தில் களம் இறங்குவதால், ஆட்டத்தின் ஆரம்பக் கட்டத்தை நிதானமாகக் கடக்க வேண்டும். அவர் ஆடுகளத்தில் நிலைத்துவிட்டால், சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள அவரிடம் கட், ஸ்வீப் மற்றும் இறங்கி வந்து அடிக்கும் பல உத்திகள் உள்ளன. 3-வது வரிசையில் களம் இறங்கும் பேட்ஸ்மேன் கொடுக்கும் பதிலடி, அணி ஆதிக்கம் செலுத்த உதவும்" என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரகானே, தேவ்தத் படிக்கல் தனது தற்போதைய ஃபார்மை நம்பி விளையாட வேண்டும் என்றும், தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார். இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள படிக்கல், 2025-26 ரஞ்சி கோப்பை தொடரில் 6 போட்டிகளில் 543 ரன்கள் குவித்துள்ளார். மேலும், சில நாட்கள் முன் நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் லெவனுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும் ஆட்டமிழக்காமல் 142 ரன்கள் குவித்து தனது சிறப்பான ஃபார்மை நிரூபித்துள்ளார்.

மேலும், கடந்த கால சாதனைகளை வைத்து இலங்கை அணியை இந்திய அணி குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும் ரகானே எச்சரித்துள்ளார். இந்தியா கடந்த 4 டெஸ்ட் தொடர்களை இலங்கைக்கு எதிராக வென்று உள்ளது. 2008-க்குப் பிறகு அவர்களிடம் டெஸ்ட் தொடரை இழந்ததில்லை. அதே சமயம், 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா தற்போது 5-வது இடத்தில் இருப்பதால், இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்த தொடரின் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். எனவே, முதல் போட்டியை வெல்வதில் மட்டுமே முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்று ரகானே கூறியுள்ளார்.