விமானிகளுக்கு போதைப்பொருள் பரிசோதனை: ஏர் இந்தியா முடிவு
- நமது டில்லி நிருபர்-
ஏர் இந்தியாவில் பணியாற்றும் அனைத்து விமானிகளுக்கும் போதை பொருள் பரிசோதனை செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணி இன்று துவங்கியது.
தாய்லாந்தின் புக்கெட்டில் இருந்து கடந்த 4ம் தேதி 137 பயணியர் மற்றும் எட்டு சிப்பந்திகளுடன் ஏர் இந்தியாவின் 'ஏர்பஸ் ஏ320' பயணியர் விமானம் டில்லி நோக்கி வந்தது. நடுவானில் திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்து 300 அடிக்கு கீழே வேகமாக இறங்கியது. இதில், 20 பயணியர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து விமான விபத்து விசாரணை அமைப்பு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.இந்தச் சூழலில், அந்த விமானத்தை இயக்கிய முதன்மை பைலட் அப்போது கஞ்சா போதையில் இருந்த அதிர்ச்சி தகவலும் அம்பலமாகியுள்ளது.
விமானம் நடுவானில் நிலைதடுமாறி கீழே இறங்கியபோது, முதன்மை பைலட் அவரது காக்பிட் அறையில் சுருண்டு கிடந்துள்ளார். ஒரு காலில் காலணி இல்லாமல், அரைகுறை ஆடைகளுடன் இருந்ததாக பயணியர் சிலர் தெரிவித்துள்ளனர்.டில்லி விமான நிலையத்தில் தரையிறங்கியதும் விமானிக்கு போதை பொருள் பரிசோதனை நடத்தப்பட்டது.
அப்போது, சிறுநீர் மாதிரி வழங்குவதற்கு கூட, அவரால் சுயமாக எழுந்து நிற்க முடியவில்லை என தெரியவந்துள்ளது. உடனிருந்த அதிகாரிகளே அவரை தாங்கி பிடித்து மருத்துவ பரிசோதனைக்கு உதவியுள்ளனர். மேலும், இந்த பரிசோதனையில் அவர் கஞ்சா பயன்படுத்தி இருப்பது உறுதியாகியுள்ளது. தாய்லாந்தில் இருந்து விமானம் புறப்படும் முன், புக்கெட்டில் சக ஊழியர்களுக்கு அந்த விமானி மதுபான விருந்து அளித்துள்ளார். அப்போதே அவர் கஞ்சா பயன்படுத்தியதாக விமான பணிப் பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஏர் இந்தியா மற்றும் ஏஐ எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து விமானிகளுக்கும் போதைப் பொருள் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இச்சோதனை இன்று துவங்கியது.