📅 Monday, 05 October 2026 IST | புரட்டாசி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil October 05, 2026 07:00 PM

இந்தியாவில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன: ஹரியானா, சத்தீஸ்கர் அழைப்பு

இந்தியாவில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன: ஹரியானா, சத்தீஸ்கர் அழைப்பு

சிங்கப்பூர் - இந்தியா பொருளியல் உறவை மத்திய அளவிலிருந்து மாநில அளவுக்கு கொண்டு செல்லும் இலக்குடன் நடைபெற்ற முதலாவது சிங்கப்பூர் - இந்தியா வளர்ச்சிக் கூட்டமைப்பு மாநாட்டில், இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகளை சிங்கப்பூர் நிறுவனங்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள ஹரியானா, சத்தீஸ்கர் மாநில முதல்வர்கள் அழைப்பு விடுத்தனர்.

சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம் ஒருங்கிணைத்த அந்த மாநாடு திங்கட்கிழமை (அக்டோபர் 5) நடைபெற்றது.

இதில் உலகளாவிய வணிகத் தலைவர்கள், முதலீட்டாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் மத்தியில் பேசிய சத்தீஸ்கர், ஹரியானா முதல்வர்கள், தங்களது மாநிலங்களில் குவிந்து கிடக்கும் வாய்ப்புகளையும் உள்கட்டமைப்பு வசதிகளையும் விரிவாக எடுத்துரைத்ததுடன், சிங்கப்பூர் வர்த்தகங்களுக்கான வளர்ச்சி வாசல் இந்தியா என்று கூறினர்.

மாநாட்டு அரங்கில் உரையாற்றிய ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, “சிங்கப்பூர் வர்த்தகர்களை முதலீட்டாளர்களாக மட்டுமே கருதிவிடவில்லை. இருதரப்புக்கும் வளர்ச்சியைச் சாத்தியப்படுத்தும் நீண்டகாலப் பங்காளியாக பார்க்கிறோம்,” என்றார்.

2017ல் சிங்கப்பூர் நிறுவனங்களுடன் 3.8 பில்லியன் வெள்ளி மதிப்பிலான ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தானதையும் குருகிராமில் அசெண்டாஸ் நிறுவனம் தொழில்நுட்பப் பூங்கா அமைத்ததையும் அவர் நினைவூட்டினார்.

டெல்லி தேசிய தலைநகர் பகுதியின் மையத்தில் உள்ள ஹரியானாவில் தளவாடம், நகர்ப்புற மேம்பாடு, தொழில்நுட்பத் திறன் மையங்கள், மேம்பட்ட உற்பத்தி ஆகிய நான்கு துறைகளில் அதிக வாய்ப்பு உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதனை சிங்கப்பூர் வணிகங்கள் பயன்படுத்திக்கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.

“ஹரியானாவின் கவனம், தொழில் செய்வதை எளிதாக்குவதில் மட்டுமன்று விரைவாக்குவதிலும் உள்ளது. முதலீட்டாளர்கள் கோப்புகளைத் துரத்துவதில் நேரத்தை செலவிடாமல் வளர்ச்சியில் கவனம் செலுத்தி இருதரப்பு முன்னேற்றத்தை நோக்கி பயணிப்பதே இலக்கு,” என்றார் திரு சைனி.

வளம் கொண்ட சத்தீஸ்கர்

இதற்கிடையே, சிங்கப்பூரில் பேசிய சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், தமது மாநிலம் 44 விழுக்காட்டுக் காடுகள், இரும்புத்தாது, நிலக்கரி போன்ற கனிம வளம், 30 ஆயிரம் மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட ஆற்றல் மையம் என்று சுட்டினார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

புதிய தொழில் கொள்கை 2024-30, ஆயிரத்திற்கும் மேற்பட்ட நேரடி மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களுக்குச் சிறப்பு சலுகை, அமைதியான தொழில் சூழல் ஆகியவை சத்தீஸ்கரில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், தரவு மையம், மின்னணுவியல், பகுதிமின்கடத்தி, உணவுப் பதப்படுத்துதல், சுகாதாரம், கல்வி, சுற்றுலா, நகர்ப்புற மேம்பாடு ஆகியவற்றில் சிங்கப்பூர் நிறுவனங்கள் நீண்டகால உற்பத்திப் பங்காளியாக வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்தின் இந்திய வர்த்தகக் குழுத் தலைவர் பிரசூன் முகர்ஜி, “இந்தியா ஒரே சந்தையன்று; அது பல மாநிலச் சந்தைகளின் கூட்டமைப்பு. நிலம், மின்சாரம், அனுமதிகள், திறன்கள் ஆகியவை மாநிலங்களின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. அதனால்தான் இந்த மாநாடு மாநில முதல்வர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அறிமுக வாய்ப்புகளை வணிகமாக மாற்றும் பணியை எங்கள் குழு மாநிலம் மாநிலமாகத் தொடரும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.