📅 Monday, 05 October 2026 IST | புரட்டாசி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 05, 2026 08:03 PM

வெற்றிப் பயண பேருந்துகளில் 'ஓடும் ஊர் பெயர்கள்’

வெற்றிப் பயண பேருந்துகளில் 'ஓடும் ஊர் பெயர்கள்’

அரசு புறநகர் பேருந்தில் நிலையாக வெற்றிப் பயணம் என உள்ளதால் குழப்பத்துக்கு ஆளாகும் பயணிகள்.

புதுக்கோட்டை: தமிழகத்தில் வெற்றிப் பயண திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள அரசு புறநகர் பேருந்துகளில் எல்இடி திரையில் திட்டத்தின் பெயர் நிலையாகவும், ஊர் பெயர்கள் ஓடிக்கொண்டும் இருப்பதால் பயணிகள் குழப்பம் அடைந்து வருகின்றனர்.

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு, புறநகர்ப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் செய்யும் 'வெற்றிப் பயணம்' எனும் திட்டத்தை தொடங்கி உள்ளது. அக்.2-ம் தேதி காந்தி ஜெயந்தி நாளில் தமிழக முதல்வர் விஜய் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 139 புறநகர் பேருந்துகள் மூலம் நாள்தோறும் 823 நடைகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது, மகளிருக்கு இலவசப் பயணம் அறிவிக்கப்பட்டுள்ள நகர், புறநகர் ஆகிய அனைத்துப் பேருந்துகளிலும் எல்இடி திரை மூலம் 'வெற்றிப் பயணம்' எனும் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

புறநகர்ப் பேருந்துகளின் முகப்பில் உள்ள எல்இடி திரையில், பேருந்து செல்லும் இடத்தின் பெயரை நிலையாகவும், வழித்தடங்களை ஓடும் வகையிலும் வைத்திருந்தனர். இதனால், பயணிகள் செல்லும் இடத்தை எளிதாக அறிந்துகொள்ள முடிந்தது. இந்நிலையில், புதிதாக அறிவிக்கப்பட்ட வெற்றிப் பயண பேருந்துகளின் முகப்பில் உள்ள எல்இடி திரையில், பேருந்து செல்லும் இடத்தின் பெயர் இருந்த இடத்தில் 'வெற்றிப் பயணம்' என நிலையாக வைக்கப்பட்டுள்ளது.

பேருந்து செல்லும் இடத்தின் பெயரும், வழித்தடங்களின் பெயர்களும் ஓடும் வகையில் உள்ளன. இதனால், ஊர்களின் பெயரை அறிந்துகொள்வதில் பயணிகளுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுக்கோட்டையைச் சேர்ந்த பயணிகள் கவிதா, வினோதா, மல்லிகை ஆகியோர் கூறியது: “வெற்றிப் பயணத் திட்டம் அமல்படுத்தப்பட்ட பேருந்துகளில் செல்லும் இடம், வழித்தடங்கள் ஆகியவை ஒன்றன் பின் ஒன்றாக ஓடிக்கொண்டே இருக்கின்றன. சில வழித்தடங்களில் எந்தெந்த ஊர் வழியாகச் செல்கிறது என்பதற்கான பெயர்கள் குறைவாக இருந்தாலும், பெரும்பாலான வழித்தடங்களில் அதிகமாக இருக்கின்றன.

ஒவ்வொரு ஊரின் பெயராக மாறி வருவதற்குள் பேருந்து நிறுத்தத்தை விட்டுப் பேருந்தும் கிளம்பிவிடுகிறது. இது பயணிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், தங்கள் ஊருக்கு செல்லும் பேருந்து எது என்பதை அறிந்து, குறிப்பிட்ட பேருந்தில் ஏறுவதிலும் தடுமாற்றம் ஏற்படுகிறது.

எனவே, தற்போது 'வெற்றிப் பயணம்' எனும் பெயர் வைக்கப்பட்டுள்ள இடத்தில் வழக்கம்போல பேருந்து செல்லும் இடத்தின் பெயரையே வைக்க வேண்டும். திட்டத்துக்கான பெயரை வேறு இடத்தில் பயன்படுத்த வேண்டும்.

நகர்ப் பேருந்துகளில் இந்தக் குழப்பம் இல்லை. அதேபோல, அனைத்துப் புறநகர்ப் பேருந்துகளிலும் துகளிலும் வெற்றிப் பயணத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்பதால், பேருந்து தொலைவில் வரும்போதே தெரிந்துகொள்ளும் வகையில் முன்பக்கத்தில் குறிப்பிட்ட வண்ணம் தீட்ட வேண்டும்” என்றனர்.

இதுபற்றி போக்குவரத்துத் துறை அலுவலர்கள் கூறும் போது, "இதுகுறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று சரி செய்யப்படும்” என்றனர்.