📅 Sunday, 23 August 2026 IST | ஆவணி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil August 23, 2026 05:04 AM

இந்தியாவுக்கு லீ குவான் யூ போன்ற தலைவர் தேவை: மயில்சாமி அண்ணாதுரை

இந்தியாவுக்கு லீ குவான் யூ போன்ற தலைவர் தேவை: மயில்சாமி அண்ணாதுரை

சிங்கப்பூர் போன்று இந்தியா முன்னேற வேண்டுமெனில் அந்நாட்டிலும் லீ குவான் யூ போன்ற தலைவர் தோன்ற வேண்டும் என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் இயக்குநர் முனைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையும் மக்கள் சிந்தனைப் பேரவையும் இணைந்து நடத்திய ஈரோடு புத்தகத் திருவிழாவின் நிறைவு விழா ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெற்றது.

அதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோது திரு மயில்சாமி அண்ணாதுரை அவ்வாறு குறிப்பிட்டார்.

ஆகஸ்ட் 8ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ எனும் தலைப்பில் பேசிய திரு திருப்புகழ் ஐஏஎஸ், அந்தக் குறளின் அடிப்படையில் எல்லார்க்கும் சம வாய்ப்பு கிடைக்கிறதா எனக் கேட்டிருந்தார்.

மறுநாள் நிகழ்ச்சியின்போது, “சிங்கப்பூரில் அந்தச் சம வாய்ப்பு எல்லார்க்கும் கிடைக்கிறது,” என்று சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முன்னாள் தலைவர் நா.ஆண்டியப்பன் குறிப்பிட்டிருந்தார்.

அவ்விருவரின் கருத்துகளையும் சுட்டிய திரு மயில்சாமி அண்ணாதுரை, “சிங்கப்பூரர்களால் நெஞ்சை நிமிர்த்தி அவ்வாறு சொல்ல முடிகிறது. நம்மால் ஏன் சொல்ல முடியவில்லை என்று நாம் சிந்திக்க வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார்.

சிங்கப்பூரிலிருந்து முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா. தினகரன் தலைமையில் 16 பேர் அடங்கிய குழுவினர் ஈரோடு புத்தகத் திருவிழாவில் கலந்துகொண்டனர்.

அங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று கொண்டாடப்பட்ட ‘சிங்கப்பூர் சிறப்பு நாள்’ நிகழ்வில் சிங்கப்பூர்க் குழுவினர் கவியரங்கம், நூல் அறிமுகம், பட்டிமன்றம், கலந்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளைப் படைத்தனர்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

சிங்கப்பூர் சிறப்பு நாள் நிகழ்வுகள் நடைபெற்ற அரங்கில், மறைந்த 30 சிங்கப்பூர்த் தமிழ் ஆளுமைகளின் படங்களும் அவர்களின் விவரங்களும் அடங்கிய பதாகைகளை மக்கள் சிந்தனைப் பேரவை வைத்திருந்தது. அவை துண்டறிக்கை வடிவிலும் அச்சிடப்பட்டு வந்தவர்களுக்கு வழங்கப்பட்டது.

கடந்த ஜூலை 31ஆம் தேதி தொடங்கிய ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 11ஆம் தேதியுடன் நிறைவுபெற்றது.