📅 Sunday, 23 August 2026 IST | ஆவணி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil August 23, 2026 07:04 AM

சிங்கப்பூர் மூத்த குடிமக்கள் நினைவுகள் பகிர்வு

சிங்கப்பூர் மூத்த குடிமக்கள் நினைவுகள் பகிர்வு

சிங்கப்பூரின் தொடக்ககால நாட்டு நிர்மாணம் குறித்த நினைவுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ள மூத்த குடிமக்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

நிறுவியோர் நினைவகத்தின் ‘குடிமக்கள் திட்டப்பணி - ஒரு மில்லியன்’ இயக்கத்திற்கு ஆதரவாக, தமிழ் முரசு செப்டம்பர் 12ஆம் தேதி ஏற்பாடு செய்யவிருக்கும் இந்நிகழ்ச்சி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கல்சா சங்கத்தில் நடைபெறவிருக்கிறது.

1950கள் முதல் 1970கள் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் வளர்ச்சியிலும் கட்டமைப்புப் பணிகளிலும் நேரடியாகப் பங்கேற்று வாழ்ந்த மூத்த தலைமுறையினரின் அனுபவங்களைப் பதிவுசெய்ய இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் மூத்த உறுப்பினர்களை ஒன்றுதிரட்டி, நாடு கட்டமைக்கப்பட்ட காலத்தில் அவர்கள் எதிர்கொண்ட சவால்கள், வெற்றிகள், அன்றாட வாழ்க்கைப் பதிவுகளை ஆவணப்படுத்தவிருக்கிறது அந்நிகழ்ச்சி.

மூத்தோர் பகிர்ந்துகொள்ளும் கதைகள், வருங்காலத் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும். அக்கதைகள், 2028ஆம் ஆண்டு நிறுவப்படவிருக்கும் நிறுவியோர் நினைவகத்தில் இடம்பெறுவதற்கான வாய்ப்பும் உண்டு.

எவ்வித உதவியுமின்றி தாமாகப் படிக்கவும் எழுதவும் தெரிந்த 60 வயதிற்கும் மேற்பட்ட சிங்கப்பூர் மூத்த குடிமக்கள் இதில் பங்கேற்கத் தகுதிபெறுவர்.

சிங்கப்பூரின் ஒலிபரப்புத் துறையில் 43 ஆண்டுகள் அனுபவம் கொண்ட மூத்த ஊடகவியலாளரும் 2016ஆம் ஆண்டின் சிங்கப்பூர் இலக்கியப் பரிசு பெற்றவருமான திரு செ.ப.பன்னீர்செல்வம், முப்பது ஆண்டுகளுக்கும் மேலான ஊடக அனுபவம் கொண்ட எழுத்தாளரும் தயாரிப்பாளருமான திரு முகமது அலியுடன் இணைந்து நடத்தும் ஒரு சிறப்புக் கலந்துரையாடலும் இந்நிகழ்ச்சியில் இடம்பெறும்.

வழிகாட்டப்பட்ட கதைசொல்லல் அமர்வில் பங்கேற்பாளர்கள் தங்களது நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளலாம்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

பங்கேற்பாளர்களின் கதைகளையும் முகங்களையும் ஆவணப்படுத்த உதவும் தொழில்முறை ஒலிப்பதிவு, நிழற்பட வசதிகள் உள்ளிட்டவை இடம்பெறும்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நுழைவுக் கட்டணம் இல்லை என்றாலும், முதலில் பதிவுசெய்வோருக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

ஆர்வம் உள்ள மூத்த குடிமக்களும் அவர்களின் குடும்பத்தினரும் tm.sg/fm26 என்ற இணையப்பக்கம் வழியாக முன்பதிவு செய்துகொள்ளலாம்.