📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health August 16, 2026 08:03 PM

இரட்டை நிலநடுக்கம் உலுக்கிய இந்தோனீசியாவுக்குப் பிரதமர் வோங் இரங்கல்

இரட்டை நிலநடுக்கம் உலுக்கிய இந்தோனீசியாவுக்குப் பிரதமர் வோங் இரங்கல்

இந்தோனீசியாவை உலுக்கிய கடும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோவிற்குப் பிரதமர் லாரன்ஸ் வோங் அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார்.

இந்தோனீசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஃப்லோரெஸ் கரையோரத்துக்கு அருகே இம்மாதம் 15ஆம் தேதி உலுக்கிய நிலநடுக்கத்தில் பலர் மாண்டதுடன் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் சேதமடைந்தன.

முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரம் கழித்து வடக்கில் உள்ள சுமத்ராவை 6.1 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் தாக்கியது. அங்கு உயிருடற்சேதம் குறித்து தகவல் இல்லை.

நிலநடுக்கங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து கவலையுற்றதாகப் பிரதமர் வோங் ஃபேஸ்புக்கில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 16) பதிவிட்டார்.

சிங்கப்பூர் அரசாங்கத்தின் சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டோருக்கும் தமது உளமார்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் வெளிப்படுத்துவதாக அவர் கூறினார்.

“இக்கட்டான இந்தக் காலகட்டத்தில் இந்தோனீசிய மக்களை நினைவில் கொண்டுள்ளோம். மீட்புப் பணிகளில் அயராது உழைக்கும் அவசரகால ஊழியர்களையும் அதிகாரிகளையும் நினைவுகூருகிறோம்,” என்று பிரதமர் சுட்டினார்.

ஃப்லோரெசில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 50க்கும் அதிகமானோர் மாண்டனர். குறைந்தது 135 பேர் காயமடைந்ததுடன் நூற்றுக்கணக்கான வீடுகளும் கட்டடங்களும் சேதமடைந்தன என்று இந்தோனீசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏறக்குறைய 5,000 பேர் தங்கள் வீடுகளைவிட்டு ஓட்டம்பிடித்தனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்த சில மணி நேரங்களில் கிட்டத்தட்ட 1,000 அதிர்வலைகளை மக்கள் உணர்ந்ததாக நாட்டின் தேசியப் பேரிடர் அமைப்பின் பேச்சாளர் சுட்டினார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

நிலநடுக்கத்திலிருந்து தப்பியோருக்கு அவசரமாக உதவி தேவைப்படுவதாக மீட்பு அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

அவர்களுக்கு உணவு, கூடாரம், மருந்து, தூய்மையான குடிநீர், மின்சார உற்பத்தி இயந்திரங்கள் ஆகியவை தேவைப்படுவதாகக் கூறப்பட்டது.