📅 Friday, 28 August 2026 IST | ஆவணி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 28, 2026 09:04 PM

இடைத்தேர்தல் தடை: முதல்வர் விஜய் மனு

இடைத்தேர்தல் தடை: முதல்வர் விஜய் மனு

சென்னை: திருச்சி கிழக்கு உள்ளிட்ட ஐந்து தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என தமிழக முதல்வர் விஜய் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கத் தடை விதிக்கக் கோரிப் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாசலபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கத் தடை விதித்து உத்தரவிட்டது.

தேர்தல் ஆணையமும், தேர்தல் வழக்கு முடியும் வரை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட மாட்டாது எனப் பதில்மனு தாக்கல் செய்திருந்தது.

இதற்கிடையே இந்த வழக்கில், முதல்வர் விஜய் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

“திருச்சி கிழக்கு தொகுதி வெற்றியை எதிர்த்து ஜூன் 17ஆம் தேதிதான் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மே 10ஆம் தேதியே தொகுதி எம்எல்ஏ பதவியிலிருந்து விலகிவிட்டேன். பதவி விலகலைச் சபாநாயகர் ஏற்ற நாளில் எந்தத் தேர்தல் வழக்கும் நிலுவையில் இல்லை,” என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலியான தொகுதிக்குத் தேர்தல் வழக்கு தாக்கல் செய்ய முடியாது எனவும், இடைத்தேர்தல் அறிவிக்கத் தடை கோரி வழக்கு தாக்கல் செய்தவர், தேர்தல் வழக்கு தாக்கல் செய்தவரல்ல, தொகுதி வாக்காளருமல்ல எனவும் விஜய் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

திருச்சி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என்ற உள்நோக்கத்தில், அடிப்படை உரிமையில்லாமல் , இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், தொகுதியின் லட்சக்கணக்கான மக்கள், எம்எல்ஏ இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுநலனுக்கு எதிரான இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

ஐந்து தொகுதிகளின் எம்எல்ஏக்களுக்கு எதிராகத் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தவர்களுக்காக, இந்தப் பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது எனவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் அறிவிக்கத் தடை விதிக்கப்பட்ட ஐந்து தொகுதிகளிலும் பலமுனைப் போட்டி நடந்துள்ளது. இரு வேட்பாளர்கள் மட்டும் போட்டியிடவில்லை என்பதால், பொதுநலன் கருதி, இடைத்தேர்தல் அறிவிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் எனவும், வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் பதில் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.