📅 Tuesday, 29 September 2026 IST | புரட்டாசி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 29, 2026 09:03 PM

ஜெயிலர் 2 ஆடியோ லான்ச்சை தவிர்த்து விட்டாரா ரஜினிகாந்த்?.. 3வது சிங்கிள் ‘ஒன் நேம்’ இன்னைக்கு ரிலீஸ்!

ஜெயிலர் 2 ஆடியோ லான்ச்சை தவிர்த்து விட்டாரா ரஜினிகாந்த்?.. 3வது சிங்கிள் ‘ஒன் நேம்’ இன்னைக்கு ரிலீஸ்!

சென்னை: தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கும் ஒரு படம் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 தான். அடுத்த மாதம் அக்டோபர் 15ம் தேதி பெரிய போட்டி எதுவும் இல்லாமல் ஜெயிலர் 2 ரிலீஸ் ஆக காத்திருக்கிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தின் புரமோஷன் பணிகளை தயாரிப்பு நிறுவனம் வேகப்படுத்தியுள்ளது.

ஆனால், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஜெயிலர் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாதா? என்கிற கேள்வி ரஜினிகாந்த் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

ஜெயிலர் 2 ரேவ் பார்ட்டி: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடைசியாக வெளியான டிசி படத்துக்கும் அனிருத் ரேவ் பார்ட்டி என்றே ஆடியோ வெளியீட்டு விழாவை கச்சேரி நிகழ்ச்சி போல நடத்தியிருந்தார். இந்நிலையில், ஜெயிலர் 2 படத்துக்கும் அதே போல செப்டம்பர் 30ம் தேதி ரேவ் பார்ட்டி நிகழ்ச்சி நடைபெறும் என்றும் மொத்த பாடல்களும் வெளியாகும் என அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

ஆடியோ லான்ச் இல்லையா?: ஜெயிலர் 2 பாடல்கள் நாளை மொத்தமாக வெளியாக உள்ளது. ஆனால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்று பேசுவது போன்ற பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்றே தகவல்கள் கசிந்துள்ளன. தர்மன் படத்திற்காக மைசூரில் உள்ள ரஜினிகாந்த் ஜெயிலர் 2 இசை வெளியீட்டு விழாவை தவிர்த்து விட்டாரா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

விஜய் அரசு அனுமதி தரலையா?: ஜெயிலர் 2 இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறாத நிலையில், விஜய் அரசு தான் அனுமதி தரவில்லை என சமூக வலைதளங்களில் ரஜினிகாந்த் ரசிகர்களே பஞ்சாயத்தை ஆரம்பித்துள்ளனர். ஆனால், சன் பிக்சர்ஸ் சமீப காலமாக தனது டிரெண்டை மாற்றியுள்ளதும் தர்மன் படத்தின் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் பிசியாக இருப்பதும் தான் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாய் நடைபெறாமல் இருப்பதற்கு காரணம் என்றும் கூறுகின்றனர்.

3வது பாடல்: ஜன நாயகன் படத்துக்கு "ஒரு பேரே வரலாறு" என பாடல் போட்ட அனிருத் அப்படியே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு "ஒன் நேம்" என ஜெயிலர் 2வில் பாடல் போட்டுள்ளார். இன்று மாலை 3வது பாடல் வெளியாகிறது. 2வது பாடலான ஒன் சன் ஓன் மூன் பாடல் இதுவரை 8.8 மில்லியன் வியூஸ் கடந்துள்ளது.