கண்முன்னே மறைந்திருக்கும் கதைகளைக் களமிறக்கும் சிங்கப்பூர் எழுத்தாளர் விழா
இலக்கியம், ஊடகம், வாழ்வு - இவற்றில் மறைந்திருக்கும் கதைகளை ஆராய சிங்கப்பூர் எழுத்தாளர் விழா நவம்பர் 13 முதல் நவம்பர் 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
‘கண்முன்னிருந்தும் காணப்படாதவை’ என்ற கருப்பொருளையொட்டி இவ்வாண்டின் விழாவில் 200க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளைப் பொதுமக்கள் எதிர்பார்க்கலாம்.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சீன, மலாய், தமிழ் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை 10 விழுக்காடு விரிவுபடுத்தப்பட்டுள்ளன என்று விழா இயக்குநர் யோங் ஷு ஹூங் தெரிவித்தார்.
“இலக்கியத்தைக் கலை போன்ற பல தளங்களின்வழி அனுபவிக்க முடியும் என்பதை இந்த நிகழ்ச்சிகள் எடுத்துக்கூறும்,” என்றார்.
அதன் அடிப்படையில், ‘நினைவோவியமும் எழுத்தும்: ஒளிந்திருக்கும் லிட்டில் இந்தியாவின் கதைகள்’ எனும் இலக்கியப் பயணம், வண்ணமயமான லிட்டில் இந்தியா வட்டாரத்தின் கதைகளை எடுத்துரைக்கும்.
எழுத்தாளர்கள் பா.கங்காவும் ஹேமலதாவும் இப்பயணத்தை வழிநடத்துவார்கள்.
இந்திய மரபுடைமை நிலையத்தில் கே.சுப்பிரமணியம், உமா கதிர் ஆகியோருடனான உரையாடலுடன் இப்பயணம் நிறைவடையும்.
தமிழ்க் கவிதையின் உளவியல் ஆழத்தையும் உணர்வுகளைத் தூண்டும் ஆற்றலையும் குறித்து ‘கவிதையின் தாது: எம்.யுவனுடன் ஓர் உரையாடல்’ நிகழ்ச்சியில் தமிழ்க் கவிஞர் யுவன் சந்திரசேகர் பேசுவார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
போர், இடம்பெயர்வு, நினைவுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு சிந்தனையைத் தூண்டும் இலக்கியங்களை எழுதுவதில் பெயர்பெற்ற எழுத்தாளர் சயந்தன், ‘போரும் வாழ்வும்: இலக்கியத்தில்’ என்ற நிகழ்ச்சியின்வழி போர் சார்ந்த இலக்கியத்தை ஆழமாக ஆராய்வார்.
‘அ.வெண்ணிலாவுடன் வரலாற்றுப் புனைவெழுத்துப் பயிலரங்கு’ நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் தமிழ் வரலாற்றுச் சிறுகதைகளை ஆராய்வார்கள்.
வரிசையில் இன்னும் பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், இவ்வாண்டின் நிகழ்ச்சிகள் எளிதில் கண்ணுக்கும் மனத்துக்கும் புலப்படாதவை குறித்த மிக முக்கியமான உரையாடல்களை முன்னெடுத்து வருகின்றன என்றார் தமிழ் நிகழ்ச்சிகளின் திட்ட மேலாளர் ஆயிலிஷா மந்திரா, 31.
“நமது தமிழ் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் மற்ற அனைத்துலகப் பேச்சாளர்களுடன் இணையும் வாய்ப்பும் உள்ளது,” என்று அவர் பகிர்ந்தார்.
சிறுகதையிலிருந்து திரைக்கதை உருவாக்கும் பயிலரங்குகள் போன்ற சில நிகழ்ச்சிகள், குறிப்பாக, இளையர்களை மனத்தில்கொண்டு உருவாக்கப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.
‘குற்றமும் மர்மமும்’ வகையின் தனித்துவத்தைக் கொண்டாட இவ்வாண்டு விழாவில் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்கீழ் பல்வேறு நிகழ்ச்சிகளில் மக்கள் பங்கேற்கலாம்.
மாணவர்களுக்கும் இளையர்களுக்கும் இன்னும் பல சுவாரசியமான நிகழ்ச்சிகளும் அனுபவங்களும் காத்திருக்கின்றன.
செப்டம்பர் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 18ஆம் தேதி வரை விழாவுக்கான நுழைவுச்சீட்டுகள் வாங்குபவர்கள் $24 கட்டணத்தில் அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம். இளையர்களுக்கான நுழைவுச்சீட்டுகள் $12க்கு விற்கப்படும்.
அதன்பிறகு நவம்பர் 13ஆம் தேதி வரை நுழைவுச்சீட்டுகள் $30க்கும் இளையர்களுக்கான நுழைவுச்சீட்டுகள் $15க்கும் விற்கப்படும்.
சிங்கப்பூர் எழுத்தாளர் விழா குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.singaporewritersfestival.com என்ற இணையத்தளத்தை நாடலாம்.