ஜிகினா தேசியக்கொடி: வாம்போ குடியிருப்பாளர்கள் சாதனை
ஜிகினா தேசியக்கொடி: வாம்போ குடியிருப்பாளர்கள் சாதனைதேசியக் கொடியின் கம்பீரமும், மக்களின் ஒற்றுமைத் தாகமும் ஒன்றிணையும்போது எந்த ஒரு சாதனையும் சாத்தியமே என்பதை வாம்போ குடியிருப்பாளர்கள் மீண்டும் ஒருமுறை நிருபித்துக் காட்டியுள்ளனர். சிங்கப்பூரின் 61-ஆவது தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, சிங்கப்பூர் லோரோங் லீமாவ் குடியிருப்பாளர் வலையமைப்பு மற்றும் இராஜா கோர்ட் குடியிருப்பாளர் வலையமைப்பு இணைந்து ஞாயிற்றுக்கிழமை 30ஆம் தேதி காலை வாம்போ சமூக மன்ற அரங்கத்தில் 'நாம் ஒன்றிணைந்து ஜொலிப்போம்' என்ற கருப்பொருளில் ஏற்பாடு செய்திருந்த விழா உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது.விழாவின் ஆகச்சிறந்த முத்தாய்ப்பாக, 1,500 சிவப்பு மற்றும் வெள்ளி வண்ண ஜிகினா வட்டுகளைக் கொண்டு 1.6 மீட்டர் நீளமும் 1.1 மீட்டர் அகலமும் கொண்ட பிரம்மாண்ட தேசியக்கொடி உருவாக்கப்பட்டு, சிங்கப்பூர்ச் சாதனைப் புத்தகத்தில் கம்பீரமாக இடம்பிடித்தது. ஐந்து மாத காலக் கடின உழைப்பில் உருவான இந்தக் கலைப் படைப்பை உள்ளூர் எழுத்தாளரும் விழா ஒருங்கிணைப்பாளருமான மில்லத் அகமது வடிவமைத்திருந்தார். இதற்கு முழு ஆதரவளித்த வாம்போ குடியிருப்பாளர்களுக்கும் சன்லவ் அமைப்பினருக்கும் அவர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற வாம்போ குடிமக்கள் ஆலோசனைக் குழுவின் தலைவர் திரு. சுவா சோங் கெங், குடியிருப்பாளர்களின் இந்த வரலாற்றுச் சாதனையைப் பாராட்டி வாழ்த்தினார். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் மகிழும் வகையில் பலவித விளையாட்டுச் சாவடிகள், சிங்கப்பூரின் அதிகாரத்துவ நான்கு மொழிகளிலான கலை நிகழ்ச்சிகள் மற்றும் சுவாரசியமான சிங்கப்பூர்ப் பற்றிய வினாடி-வினா போட்டிகள் என அரங்கம் களைகட்டியது. கண்கவர் ஆடைகளை அணிந்து வந்தவர்களுக்கும், அதிர்ஷ்டக் குலுக்கலில் வென்றவர்களுக்கும் என்டியுசி பற்றுச்சீட்டுகள் பரிசாக வழங்கப்பட்டன.கலாம் உணவகம் ஜான் ராமமூர்த்தி வழங்கிய சுவையான மதிய உணவோடு விழா களைகட்டியது. சிங்கப்பூர் பற்றிய பழைய நினைவுகளை அசைபோட்டு தேசியப் பாடல்களை இணைந்து பாடியது மனதிற்கு நிறைவாக இருந்ததாகத் திருவாட்டி குளோரினா தெரிவித்தார். 'எங்கள் சிங்கப்பூர்' பாடலுக்கு மாணவர்கள் ஆடிய நடனம் அனைத்துச் சமூக மக்களையும் கவர்ந்ததாகவும், இது ஒரு மறக்க முடியாத அனுபவம் என்றும் திரு. நூருல் அமீன் பரவசத்துடன் பகிர்ந்துகொண்டார். திருவாட்டி ஏரியல் மெய் ஹூய் மற்றும் திருவாட்டி லியோபார்ட் வோங் அழகாகத் தொகுத்து வழங்கிய இவ்விழா, சிங்கப்பூர் மக்களின் பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் வண்ணமயமாக நிறைவுற்றது.- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்