📅 Monday, 31 August 2026 IST | ஆவணி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil August 31, 2026 02:04 PM

சிங்கப்பூர்: பதின்ம வயதினருக்கான சமூக ஊடக நேர வரம்பு திட்டம்

சிங்கப்பூர்: பதின்ம வயதினருக்கான சமூக ஊடக நேர வரம்பு திட்டம்

பதின்ம வயதினரிடையே சமூக ஊடகத்திற்கு அடிமையாகும் போக்கு, தீங்கு விளைவிக்கும் தகவல் பகிர்வு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டிற்குத் தினசரி நேர வரம்பை நிர்ணயிப்பது உள்ளிட்ட கட்டாயப் பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சிங்கப்பூர் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

இது குறித்துத் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ ஆகஸ்ட் 28ஆம் தேதி ஊடகங்களுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கினார்.

அதில், சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுக்குள் கொண்டுவர இந்த நேர வரம்புக் கட்டுப்பாடு துணைபுரியும் என அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஒரு குறிப்பிட்ட செயலியைப் பயன்படுத்துவதற்கு நேர வரம்பை நிர்ணயிப்பது போன்ற நடவடிக்கை திறன்பேசித் திரையை வேகமாக முடிவில்லாமல் நகர்த்தும் பழக்கத்தைக் கையாள்வதற்கான ஒரு வழியாக இருக்கும் எனக் கூறிய அமைச்சர் டியோ, தினசரி நேர வரம்பு குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இளையர்களின் சமூகத் தொடர்புகளையும் மனநலத்தையும் பாதுகாப்பதற்குச் சிங்கப்பூர் அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் அந்த நேர்காணலில் அவர் பகிர்ந்துகொண்டார்.

இவ்வாண்டின் தேசிய தினப் பேரணி 2026 உரையில் முக்கியமாகப் பேசப்பட்ட தலைப்புகளில் இதுவும் ஒன்றாகும்.

வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்பது, பதின்ம வயதுப் பயனாளர்கள் மற்றவர்களுடன், குறிப்பாக அறியாத நபர்களுடன் எவ்வாறு தொடர்புகொள்கிறார்கள் என்பதையும் அவர்களுக்குப் போதிய பாதுகாப்பு உள்ளதா என்பதையும் குறிக்கிறது என்றார் அமைச்சர் டியோ.

மேலும், தானியக்க முறை, திறன்பேசித் திரையை முடிவில்லாமல் நகர்த்தும் முறை போன்ற பயன்பாட்டை நீட்டிக்கும் அம்சங்களுக்கும் அந்நடவடிக்கைகள் பொருந்தும் என அவர் சுட்டினார்.

இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்

சுகாதார அமைச்சினால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு சுட்டிக்காட்டிய இரு முக்கிய அம்சங்களையும் சிங்கப்பூர் கருத்தில் கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

ஜூலை மாதம் வெளியான அந்த நிபுணர் குழுவின் அறிக்கையில், 15 முதல் 17 வயதுடைய பயனாளர்களில் மூவரில் ஒருவர் ஏற்கெனவே தினமும் 3 மணி நேரத்திற்கு மேலாகச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதாகவும் 10 முதல் 24 வயதுடைய பயனாளர்களில் ஆறில் ஒருவரிடம் அவற்றிற்கு அடிமையாகும் அறிகுறிகள் தென்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் பாதுகாப்பு வழிமுறைகளை அறிமுகப்படுத்த முடியாத அல்லது விருப்பமில்லாத சமூக ஊடகங்கள் தங்களின் பயனாளர்களுக்கான குறைந்தபட்ச வயது வரம்பை 13 என்பதிலிருந்து 18 ஆக உயர்த்த வேண்டியிருக்கும் எனத் திருவாட்டி டியோ தெரிவித்தார்.

வயதுச் சரிபார்ப்பைக் கட்டாயமாக்கும் சட்டத் திருத்தங்கள், பதின்ம வயதினருக்கான கட்டாயப் பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அடித்தளமாக அமையும்.

கட்டுப்பாடுகள் மட்டுமே விரும்பிய முடிவைத் தராது என்பதைச் சிங்கப்பூர் நன்கு அறிந்துள்ளது. இதனால், ஆரோக்கியமான மின்னிலக்கப் பழக்கவழக்கங்களைப் பண்படுத்த, மே மாதத்தில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு தொடங்கிய ‘ஸ்கிரீன் ஸ்மார்ட்’ (Be Screen Smart) போன்ற இயக்கங்களை ஆரம்பித்தது.

‘ஸ்கிரீன் ஸ்மார்ட்’ இணையவாசல், பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கான இணைய உள்ளடக்கங்களைத் தேர்ந்தெடுக்க உதவிக்குறிப்புகளை வழங்குவதுடன், குடும்பங்களுக்கான இணையத்துடன் தொடர்பில்லாத நடவடிக்கைகளையும் பரிந்துரைக்கிறது.