காசு கொடுத்தா எங்க வேணும்னாலும் போயிடுவீங்களா? ராஜு பேசி மோசமான வார்த்தை.. பெண் ஆதங்கம்
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சமிருக்காது. ஆனால், இந்த முறை நிகழ்ச்சி முழுமையாக தொடங்குவதற்கு முன்பே, தேர்வு போட்டியிலேயே அடுத்தடுத்து பல திடுக்கிடும் சர்ச்சைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பொதுமக்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டு, கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். அதில் தேர்வு செய்யப்பட்ட 50 போட்டியாளர்களில் இருந்து பிக் பாஸ் வீட்டிற்குச் செல்லும் சிலரைத் தேர்ந்தெடுக்கும் நடுவர்களாக ஓவியா, ஆரி, ராஜு மற்றும் மாயா ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.
ஆனால், ஏற்கனவே போட்டியாளர்களைத் தேர்வு செய்து முடித்துவிட்டு, பொதுமக்களை சும்மா ஒரு நாடகத்திற்காக வரவழைத்து துன்புறுத்துகிறார்கள் என அதில் கலந்துகொண்டு வெளியேற்றப்பட்ட காமன்மேன் போட்டியாளர்கள் அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எலிமினேட் ஆன மோனிகா கிறிஸ்தினா என்பவர் அளித்துள்ள பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.
பிக் பாஸ் காமன் மேன்: அதில், நான் ஒன்றும் இன்ஸ்டாகிராம் பிரபலம் கிடையாது. ஒரு அலுவலகத்தில் சாதாரணமாக வேலை செய்து கொண்டிருக்கும் எனக்கு, பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியிலிருந்து போன் வந்தது. 20 நாட்கள் ஆகும் என்று சொன்னார்கள். வேலை செய்யும் இடத்தில் என்ன சொல்லி லீவ் கேட்பது என்று தெரியாமல், பல சிரமங்களுக்கு நடுவே பேசி சமாளித்துவிட்டுத்தான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். ஆனால், என்னை வெறும் 3 நாட்களிலேயே திருப்பி அனுப்பிவிட்டார்கள். என்னைபோல சாதாரண மனிதர்களுக்கு எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும். அதையெல்லாம் விஜய் டிவி நிர்வாகம் யோசித்துக்கூட பார்க்கவில்லை. 3 நாட்களாக ஒரு இடத்தில் அடைத்து வைத்து, பல டாஸ்க்குகளைக் கொடுத்துவிட்டு இறுதியில் வெளியில் அனுப்பிவிட்டார்கள்.
கேரக்டரையே அசிங்கப்படுத்திட்டாரு: நடுவராக இருக்கும் ராஜு பேசிய வார்த்தை மிகவும் மோசமானது. அதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஏன் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தீங்க? என்று அவர் கேட்டார். அதற்கு நான் பணத்திற்காக வந்தேன் என்று நேர்மையாக சொன்னேன். உடனே அவர், அப்ப காசு கொடுத்தா எங்க வேணும்னாலும் போயிடுவீங்களா? என்று கேட்டார். அவர் அதைக் கேட்டதும் எனக்கு அடுத்து என்ன பேசுவது என்றே தெரியவில்லை. அப்படியே மைண்ட் 'பிளாக் அவுட்' ஆகிவிட்டது. இந்த மாதிரிப பேசுவது ஒரு பெண்ணின் கேரக்டரையே அசிங்கப்படுத்தும் செயல் அல்லவா?
கேள்வி மேல கேள்வி: இதே வார்த்தையை நான் நடுவர்களை பார்த்துக் கேட்டிருந்தால் அவர்கள் ஒத்துக்கொள்வார்களா? ஒரு போட்டியாளரை தூண்டிவிட வேண்டும் , திணறடிக்க வேண்டும் என்றே வைத்துக்கொண்டாலும், அதற்கு ஒரு எல்லை இல்லையா? என்ன கேட்க வேண்டும் என்ற விவஸ்தை வேண்டாமா? இப்போ விஜய் டிவி வெளியிட்ட புரோமோவில் "இடம் பொருள் ஏவல் தெரியாதா?" என்று போட்டியாளரைப் பார்த்துக் கேட்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. அந்தப் புரோமோவில் இருக்கும் 'இடம் பொருள் ஏவல் தெரியாதா?' என்ற கேள்வியை, போட்டியாளர்களை மதித்துப் பேசத் தெரியாத நடுவர் ராஜுவை பார்த்துதான் நான் கேட்கிறேன் என மிகுந்த மனவேதனையுடனும் அந்த பெண் பேசி இருக்கிறார்.