சென்னையில் அமைச்சர் அமித் ஷா: உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், ஆண்டுதோறும் தென் மாநில முதல்வர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. தென் மாநிலங்களுக்குள் பரஸ்பரம் ஒத்துழைப்பு, வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு இந்த மாநாடு நடத்தப்பட்டு வந்தது. எனினும், கடந்த 2022-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த மாநாடு நடைபெறாமல் இருந்தது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தென் மண்டல கவுன்சில் மாநாடு, கடைசியாக 2022 செப்டம்பரில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அதற்குப் பிறகு, கடந்த 3 ஆண்டுகளாக இந்த மாநாடு பல்வேறு நிர்வாகக் காரணங்களாலும், தேர்தல் மற்றும் அரசியல் சூழல்களாலும் நடத்தப்படவில்லை.
இந்நிலையில், 31-வது தென் மாநில முதல்வர்கள் மாநாடு இன்று சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்குகிறார். இதில் தமிழக முதல்வர் விஜய், கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், கேரள முதல்வர் சதீசன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்கின்றனர். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை.
தென் மாநில முதல்வர்களுடன் அந்தந்த மாநில தலைமைச் செயலர்கள், உள்துறை செயலர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், கூட்டுறவைப் பலப்படுத்துவது, கட்டமைப்பு மேம்பாடு, நீர்வள பகிர்வு, கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், பேரிடர் மேலாண்மை, குற்றங்கள் தடுப்பு, எல்லை பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.
தற்போது காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே முரண்பாடுகள் எழுந்துள்ள நிலையில் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழக முதல்வர் விஜய் மற்றும் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் இந்த மாநாட்டில் நேரில் சந்திக்க உள்ளனர். அப்போது காவிரி விவகாரம் குறித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் முதல்வர் பதவியேற்ற பிறகு அமைச்சர் அமித் ஷாவை முதல் முறையாக விஜய் சந்திக்க உள்ளார்.
இந்த மாநாட்டில் பங்கேற்க மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று இரவு 9.10 மணிக்கு சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்திலிருந்து காரில் கோவளம் சென்றார். அங்கு தனியார் ஓட்டலில் இரவு தங்கினார். இன்று காலை தென் மாநில முதல்வர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். பின்னர் பிற்பகல் 3.30 மணியளவில் அவர் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
மாநாட்டை முன்னிட்டு கோவளம் பகுதியைச் சுற்றி 3-அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டிஜிபி மகேஷ் குமார் நேரடி மேற்பார்வையில் ஆயிரக்கணக்கான போலீஸார், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் பிரிவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மாநாடு நடைபெறும் தனியார் நட்சத்திர ஓட்டல் மற்றும் கிழக்குக் கடற்கரை சாலை (இசிஆர்) பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலம் 24 மணி நேர தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலோரக் காவல் படை மற்றும் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் படகுகள் மூலம் கடல் வழியிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி உள்ளனர். மாநாட்டுப் பகுதிகள், விமான நிலையம் முதல் ஈசிஆர் வரையிலான பாதைகளில் போக்குவரத்து மாற்றங்களும், விஐபி வாகனங்களுக்குப் பிரத்யேக பாதுகாப்பு வழித்தடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சி நடைபெறும் பகுதி சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு ட்ரோன்கள், ராட்சத பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் அமித் ஷா வருகையை முன்னிட்டு இன்று காலை 11 முதல் மாலை 5 மணி வரையில் சுற்றுலாப் பயணிகளுக்கு மாமல்லபுரத்தில் கலைச் சின்னங்களைக் காண அனுமதியில்லை என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. மேலும், மாமல்லபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் பாதுகாப்புத் துறையினரின் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.