காலை உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர் ஏன்? தி.மு.க., மாஜி கேள்வி; அமைச்சர் விளக்கம்
சென்னை: முதல்வரின் காலை உணவு திட்டத்தின் பெயரை, பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டமாக மாற்றியது குறித்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்தார்.
தி.மு.க., கொறடா எ.வ.வேலு: கோவையில் ஈ.வெ.ரா., பெயரில் நுாலகம் கட்டப்பட்டு, மூன்று மாதங்களாக திறக்கப்படாமல் உள்ளது. கொள்கை தலைவராக ஈ.வெ.ராவை ஏற்றதாக தம்பட்டம் அடிக்கும் அரசு, ஏன் இன்னும் நுாலகத்தை திறக்காமல் கிடப்பில் போட்டுள்ளது?
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: தம்பட்டம் அடிக்கின்றனர் என்பது தேவையற்ற வார்த்தை. த.வெ.க., அலுவலகத்தில் ஈ.வெ.ரா., சிலை உள்ளது. ஆனால் தி.மு.க., தலைமையகத்தில் ஈ.வே.ரா., சிலை இன்னும் அமைக்கப்ப டவில்லை.
எ.வ.வேலு: இந்தி யாவில் பல மாநிலங்கள் பின்பற்ற விரும்புகிற, பல நாடுகள் கூட விரும்பும் திட்டம்தான் முதல்வரின் காலை உணவு திட்டம்.
அந்த திட்டத்தின் பெயரை, பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என மாற்ற வேண்டிய அவசியம் என்ன? முதல்வர் என்பது பொதுவான பெயர், அதை ஏன் மாற்ற வேண்டும்?
அமைச்சர் ராஜ்மோகன்: கடந்த 1996ம் ஆண்டு, கருணாநிதி ஆட்சி காலத்தில், 'ஜெ.ஜெ., பிலிம் சிட்டி' என்ற பெயரை, எம்.ஜி.ஆர்., திரைப்பட நகரம் என்று மாற்றினார். அதன் பின், ஜெயலலிதா பசுமை வீடுகள் திட்டம், கலைஞர் கனவு இல்லம் ஆனது. அம்மா மருந்தகம், முதல்வர் மருந்தகம் ஆனது.
தற்போது காலை உணவு திட்டம், 273 கோடி ரூபாய் மதிப் பீட்டில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பயன் பெறும் இந்த திட்டத்திற்கு காமராஜர் பெயரை விட, வேறு பொருத்தமான பெயர் உலகத்திலேயே இல்லை.
இவ்வாறு விவாதம் நடந்தது.
சட்டசபையில் பேசிய எ.வ.வேலு, தி.மு.க., ஆட்சியில் தான் அமைச்சராக இருந்த போது, செய்த திட்டங்கள் தொடர்பான சாதனை பட்டியலை வாசித்தார். அவ்வப்போது சபாநாயகர் குறுக்கிட்டு, நேரம் கடந்து செல்வதை சுட்டிக்காட்டினார். ஆனால், எ.வ.வேலு பேசிக்கொண்டே இருந்தார். அதற்கு அமைச்சர் செங்கோட்டையனும் இரண்டு முறை எழுந்து எதிர்ப்பு தெரிவித்தார்.அதன்பிறகும் எ.வ.வேலு அசரவில்லை. இதையடுத்து பேசிய சபாநாயகர் பிரபாகர், ''முன்னாள் அமைச்சர் வேலு, பழைய நினைப்பிலேயே பேசிக்கொண்டு இருக்கிறார். கொள்கை விளக்க குறிப்புகளை வாசிக்கிறார். பில்டிங் ஸ்ட்ராங்; பேஸ்மென்ட் வீக்'' என கிண்டலடித்தார். இருப்பினும், 43 நிமிடங்கள் வேலு பேசினார்.