காமன்வெல்த் போட்டியில் சாதனை படைத்த மவ்ஜீத் சிங்
வயது என்பது வெறும் எண் மட்டுமே. விருப்பமான காரியங்களைச் செய்வதற்கு அது ஒருபோதும் தடையாக இருக்கக்கூடாது என்ற கூற்றை மெய்ப்பித்துள்ளார் சிங்கப்பூரின் உடற்குறையுள்ளோருக்கான திடல் உருட்டுப் பந்தாட்ட வீரர் மவ்ஜீத் சிங்.
62 வயது மவ்ஜீத் சிங், 2026ஆம் ஆண்டு கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுள்ள 53 பேர் கொண்ட சிங்கப்பூர் அணியின் ஆக மூத்த விளையாட்டு வீரர் ஆவார்.
உடற்குறையுள்ளோருக்கான ஆண்கள் இணை பி6-பி8 பிரிவில், தமது 56 வயது இணையான கிர்மேர்ன் முகம்மதுடன் இணைந்து இவர் களமிறங்கினார். சிங்கப்பூர் உடற்குறையுள்ளோருக்கான விளையாட்டு மன்றத்தில் தளவாட அதிகாரியாகப் பணியாற்றும் மவ்ஜீத் சிங், உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்று உடற்பயிற்சி செய்வது, நீச்சல் குளத்தில் நீந்துவது போன்றவற்றின் மூலம் தமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறார்.
கடந்த நான்கு ஆண்டுகளாகத் தேசிய உடற்குறையுள்ளோருக்கான திடல் உருட்டுப் பந்தாட்ட அணியில் இணைந்து விளையாடி வரும் இந்த இணை, 2023ஆம் ஆண்டு உலக வெற்றியாளர் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் நடப்பாண்டில் நடைபெற்ற ‘ஃபோர் நேஷன்ஸ்’ தொடரில் தங்கப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளது.
காமன்வெல்த் போட்டிகளில் முதன்முறையாக அறிமுகமான மவ்ஜீத் சிங், ஜூலை மாதம் 23ஆம் தேதியன்று நடைபெற்ற தொடக்கவிழாவில் சிங்கப்பூர்க் கொடியை ஏந்திச் செல்லும் கௌரவத்தையும் பெற்றார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் உடற்குறையுள்ளோருக்கான திடல் உருட்டுப் பந்தாட்டத்தில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான தொடக்க ஆட்டங்களில் மவ்ஜீத் சிங்-கிர்மேர்ன் முகம்மது இணை தோல்வியடைந்தது.
அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுடனான ஆட்டங்களில் இந்த இணை சமநிலை கண்டது. இருப்பினும், இந்த மூன்று ஆட்டங்களிலும் ‘டை-பிரேக்கர்’ எனும் வெற்றியாளரை நிர்ணயிக்கும் சுற்றில் மவ்ஜீத் சிங்-கிர்மேர்ன் முகம்மது இணை தோல்வியைத் தழுவியதால், தனது பிரிவில் 6வது இடத்தைப் பிடித்துப் போட்டியை நிறைவு செய்தது.
1984ஆம் ஆண்டில், தமது 20வது வயதில் ஏற்பட்ட கோரமான சாலை விபத்தில் காலை இழந்தபோதிலும், செயற்கைக் காலைப் பயன்படுத்தி மனந்தளராமல் தன்னம்பிக்கையுடன் மீண்டு வந்தார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
2001ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசியான் உடற்குறையுள்ளோருக்கான விளையாட்டுப் போட்டிகளில் குண்டெறிதல், வட்டு எறிதல் பிரிவுகளில் வெண்கலப் பதக்கம் வென்ற இவர், 2015ஆம் ஆண்டில் திடல் உருட்டுப் பந்தாட்டத்துக்கு மாறினார்.
“உடல்நலம் ஒத்துழைக்கும் வரை தொடர்ந்து விளையாடுவேன். சவால்களை எதிர்கொண்டு மக்கள் தங்களை நம்பத் தொடங்கினால், அதைவிடப் பெரிய பதக்கம் வேறில்லை,” என மவ்ஜீத் சிங் தெரிவித்தார்.