காங்., முதல்வர்கள் அதானிக்கு ஆதரவு!
பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் சிவகுமார் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், டில்லி வந்து காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை சிவகுமார் சந்தித்தார். கட்சி தொடர்பான பல விஷயங்கள் பேசப்பட்டன. தொழிலதிபர் அதானி குறித்தும் சில விளக்கங்களை சிவகுமாரிடம் கேட்டார் ராகுல்.
'அதானியும், பிரதமர் மோடியும் நண்பர்கள். அதானிக்காக எதையும் செய்வார் மோடி' என, பிரசாரம் செய்து வருகிறார் ராகுல். 'வெளியே தான் இந்த எதிர்ப்பு. ஆனால், காங்., ஆளும் மாநிலங்களில் அதானிக்கு தான் முதலிடம்' என, பா.ஜ., கிண்டலடிக்க, கர்நாடக முதல்வர் சிவகுமார்- - அதானி சந்திப்பு, ராகுலுக்கு தலைவலியை உண்டாக்கி விட்டது.
கடந்த 23ல், தொழிலதிபர் அதானி, பெங்களூரில் முதல்வர் சிவகுமாரை, அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். 'இது என் தனிப்பட்ட சந்திப்பு அல்ல. முதல்வர் என்ற முறையில், கர்நாடகாவில் அதானி முதலீடு செய்ய உள்ளார். அது தொடர்பாக தான் சந்தித்தேன்' என, ராகுலிடம் விளக்கம் அளித்தார் சிவகுமார்.
பெங்களூரின் சில்க் போர்டிலிருந்து, ஹெப்பால் வரை தரைக்கு அடியில், 22,276 கோடி ரூபாய் செலவில், சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை தயாரித்துள்ளார் சிவகுமார். இந்த பாதை, பெங்களூரின் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் என்பது அவரின் கருத்து. இத்திட்டத்திற்கு, 'டெண்டர்' கோரப்பட்டது.
மற்ற கம்பெனிகளை விட, குறைந்த தொகையில் திட்டத்தை நிறைவேற்றி தருவதாக டெண்டரில் குறிப்பிட்டுள்ளது, அதானி குழுமம். இதனால் இவர்களுக்குத் தான் டெண்டர் கிடைக்கும். ஆனால், 'இத்திட்டத்தால் டிராபிக் நெருக்கடிக்கு தற்காலிக தீர்வு தான் கிடைக்கும்; 2031ல் மீண்டும் நெரிசல் ஏற்படும்' என, வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், சிவகுமாரோ இத்திட்டத்தை செயல்படுத்தினால் அடுத்து வரும் சட்டசபை தேர்தலில், காங்., மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என, நம்புகிறார்.
காங்., ஆட்சி செய்யும் தெலுங்கானாவிலும், 10,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது அதானி குழுமம். ராகுலுக்கோ அதானி எதிரி; ஆனால், அவர் கட்சி ஆட்சி செய்யும் மாநில முதல்வர்களுக்கு அதானி தான், 'ஹீரோ!'