கார் வேண்டாம்; கார் பந்தயம் வேண்டுமா; சட்டசபையில் அமைச்சர் கேள்வியால் திமுக ஆவேசம்
சென்னை: ''கார் வேண்டாம்; கார் பந்தயம் வேண்டுமா,'' என, அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பியதால், திமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
திமுக மார்கண்டேயன்: கேட்காமலேயே அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் கார் வழங்குவதாக, முதல்வர் விஜய் அறிவித்தார். ஆனால், விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை. மீனவர்களுக்கு, 20,000 ரூபாய் உதவித்தொகை தருவோம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
அமைச்சர் நிர்மல்குமார்: விசிக எம்எல்ஏ வேண்டுகோளின்படி, எம்எல்ஏக்கள் தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்வதற்காக கார் வழங்கப்படும் என, முதல்வர் அறிவித்தார். ஐந்து கார், பத்து கார் வைத்திருந்து பலனில்லை. தொகுதிக்குள் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும். நாங்கள் தொகுதிக்கு செல்லும் போது, எங்கள் கிராமத்திற்கு எம்எல்ஏ வந்தது இல்லை என்று மக்கள் சொல்கின்றனர். மக்களை சந்திக்க கார் தேவை.
திமுக கே.என்.நேரு: கார் தேவைப்படும் எம்எல்ஏக்கள் வாங்கிக் கொள்ளலாம். அதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், எம்எல்ஏக்கள் தொகுதிக்கு செல்லவில்லை என்று கூறக்கூடாது. மார்கண்டேயன், ஒரே தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றவர். மக்களின் நன்மதிப்பை பெற்றவர்.
அமைச்சர் செங்கோட்டையன்: எத்தனை கோடி ரூபாயில் கார் வைத்திருந்தாலும், அரசு தரும் காரில் செல்லும் போது, அதற்கு தனி மரியாதை இருக்கும். கார் வேண்டாம் என்கிறீர்கள். ஆனால், கார் பந்தயத்திற்கு, 24 கோடி ரூபாய் செலவழித்தீர்களே; அது யாருடைய பணம்?
திமுக கே.என்.நேரு: உதயநிதி விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது, செஸ், ஹாக்கி போட்டிகளை நடத்தினார். அதுபோலவே, கார் பந்தய போட்டியை நடத்தினார்.
சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்: சிரமத்தில் இருக்கும் எம்எல்ஏக்களுக்கு தான் கார் வழங்கும் திட்டத்தை, முதல்வர் விஜய் அறிவித்தார். எனவே, கார் குறித்து பேசுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி: சென்னையில் முதல் முறையாக சர்வதேச கார் பந்தயத்தை நடத்தினோம். எங்களை கொச்சைப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு, விளையாட்டு வீரர்களை கொச்சைப்படுத்த வேண்டாம்.
அமைச்சர் செங்கோட்டையன்: கார் பந்தயத்திற்கு, 24 கோடி ரூபாய் செலவிட்டது பற்றியே கேட்டேன். விளையாட்டு வீரர்களை கொச்சைப்படுத்தவில்லை.
அமைச்சர் அருண்ராஜ்: கடந்த திமுக ஆட்சியில், நிதிப்பற்றாக்குறை இருப்பது தெரிந்தும், கடற்கரையில் கருணாநிதி பேனா நினைவு சின்னம் வைக்கும் திட்டத்தை அறிவித்தது ஏன்?
திமுக எ.வ.வேலு: எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளின் கோரிக்கையை ஏற்று, கடற்கரையில் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு மத்திய அரசும் அனுமதி தந்தது.
ஆனால், நிதிப் பற்றாக்குறை இருப்பதால், அத்திட்டத்திற்கு அன்றைய முதல்வர் ஸ்டாலின் மறுத்து விட்டார்.
சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்: பேனா நினைவு சின்னத்திற்கு, மக்களிடம் இருந்து பெரும் எதிர்ப்பு எழுந்ததையும் கூற விரும்புகிறேன்.
இவ்வாறு விவாதம் நடந்தது.