காவிரி பங்கீடு, தொகுதி மறுவரையறை: ஒரு வேண்டுகோள், ஓர் அழைப்பு, இரு புறக்கணிப்புகள்!
காவிரி பங்கீடு, தொகுதி மறுவரையறை: ஒரு வேண்டுகோள், ஓர் அழைப்பு, இரு புறக்கணிப்புகள்!
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மறுத்ததில் ஒரு பக்குவமின்மை வெளிப்பட்டது என்றால், அதற்காக த.வெ.க தரப்பிலிருந்து கூறப்பட்ட காரணங்கள் இரு மடங்கு பக்குவமின்மையை வெளிப்படுத்தியது.
அத்தகைய கூட்டங்களுக்கு அரசு அழைப்பு விடுப்பதும், கட்சிகள் பங்கேற்பதும் நடந்திருக்கின்றன. இப்போது, மேகதாது அணை விவகாரத்தின் பின்னணியில் காவிரி நீர் பங்கீடு தொடர்பான பொது அணுகுமுறையை வகுப்பதற்காகத் தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டுவதற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், அதை ஜோசப் விஜய் அரசு ஏற்கவில்லை.
மற்றொரு கூர்மையான விவகாரமாக மக்களவைத் தொகுதி மறுவரையறை சட்ட முன்வரவை ஒன்றிய அரசு மறுபடியும் கொண்டுவரக்கூடும் என்ற நிலையில், அதில் மாநிலத்தின் குரலாக ஒரு பொதுக்கருத்தை உருவாக்குவதற்காகத் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்தார்.
கடந்த சனிக்கிழமை (ஆக. 8) நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் த.வெ.க அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ் (12 பேர்), வி.சி.க (2), ஐ.யூ.எம்.எல் (1), த.வெ.க அணியில் இடம்பெற்றிருக்கும் ம.தி.மு.க (1), ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் சி.பி.ஐ–எம்(2), சி.பி.ஐ (2) ஆகிய கட்சிகளின் 20 எம்.பி.க்கள் கலந்துகொண்டார்கள். தி.மு.க (22), அ.தி.மு.க (10), தே.மு.தி.க (2), பா.ம.க (2), ம.நீ.ம (1) ஆகிய கட்சிகளின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் 37 பேர் அந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தார்கள்.
காவிரிப் பிரச்னையில் தமிழகத்தின் எல்லாக் கட்சிகளுமே ஒரே நிலைப்பாட்டைத்தான் கொண்டிருக்கின்றன. தனது நிலைப்பாடும் அதுவேதான் என்று தவெக–வும் அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து ஒருமித்த குரல் ஒலிக்கிறது என்ற செய்தியை கர்நாடக மாநில காங்கிரஸ் அரசுக்கும், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கும், ஏன் புதிய வழக்கை எடுத்துக்கொண்டுள்ள உச்ச நீதிமன்றத்துக்குமே கூட, கொண்டுசென்றிருக்க முடியும். ஒருமித்த குரலின் தாக்கம் எப்போதுமே வலுவானதாக அமையும். அந்த வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பை விஜய் அரசு தவறவிட்டுவிட்டது.
கர்நாடக அரசு அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டியது என்ற செய்தியை அவர் கவனிக்கவில்லை போலும். இறுதிப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்குள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மட்டும் விவாதிப்பதற்கும், தேர்தலில் ஓர் இடம் கூடப் பெற முடியாமல் போகிற கட்சி உட்பட, அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கூடி விவாதிப்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.
அமைச்சர் இன்னொரு காரணத்தையும் கூறினார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைக் கூறுவார்கள், அதில் ஒருமித்த கருத்தை உருவாக்க முடியாமல் போகும் என்றார். மாறுபட்ட கருத்துகள் வெளிப்படுவதுதான் ஜனநாயக மாண்பு! அனைவரும் ஒரே கருத்தை ஒப்பிக்க வேண்டிய கட்டாயமில்லை. ஒவ்வொரு கட்சியும் தனக்கெனத் தனி அணுகுமுறையைக் கொண்டிருக்கும், அந்த அடிப்படையில்தான் அதன் கருத்துகள் வெளிப்படும்.
ஒரே கருத்தாக வராதபோது பெரும்பான்மையாக முன்வைக்கப்பட்ட கருத்து எதுவோ அதுவே பொதுக்கருத்தாக மாறும். இந்த ஜனநாயகத்தை மதிக்கத் தயாராக இல்லையா இந்த அரசு? அமைச்சர் கூறும் காரணத்தை ஏற்பதானால், சட்டமன்றக் கூட்டமே கூட மாறுபட்ட கருத்துகள் ஒலிக்கும் இடம்தானே? அதையும் வேண்டாம் என்று தள்ளிவிடலாமா?
ஒருமைப்பாடு உள்ளக் கருத்துகள் வரப்போவதில்லை என்ற முன்முடிவின் அடிப்படையில்தான் மக்கள் நலன் சார்ந்த முக்கியமான கலந்துரையாடலை நடத்த மறுக்கப்பட்டது என்றால், அதில் ஜனநாயகம் இல்லை, நல்ல மாற்றத்திற்கான அறிகுறியும் இல்லை.
அத்துடன், தற்போது மறுபடியும் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், அங்கே முன்வைப்பதற்கான வலுவான வாதங்களுக்கான ஆலோசனைகளும் அந்தக் கூட்டத்தில் வந்திருக்கும். வறட்டுக் கவுரவப் பிடிவாதத்தால் அந்த ஆலோசனைகளுக்கு அணை போடப்பட்டுவிட்டது.
இப்படியெல்லாம் யோசிக்கவில்லை என்று த.வெ.க தலைமை சொல்லக்கூடும். அப்படியானால், இந்தப் பிரச்னையை “வெற்றிகரமாக” மேலாண்மை செய்த பெருமை தனக்கு மட்டுமே வந்து சேர வேண்டும் என்ற குறுகிய நோக்கமே காரணமாகிறது. அப்படிதானா? கர்நாடகத்தில் பெரு மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்ததால், தமிழகத்திற்கும் கேரளத்துக்கும் புதுச்சேரிக்குமான காவிரி நீர் தற்போதைக்குத் திறந்துவிடப்பட்டிருக்கிறது. அதை வேண்டுமானால் தனது அணுகுமுறைக்குக் கிடைத்த “வெற்றி” என்று சொல்லிக்கொள்ள வேண்டியதுதான்.
அதற்கான காரணங்கள் மேம்போக்கானவை அல்லதான். தனது கட்சிக்கென நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், தமிழகத்தின் கவலையையும், சட்ட முன்வரைவு கைவிடப்பட வேண்டும் என்ற வலியுறுத்தலையும் ஒரே குரலாக ஒலிக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரவேற்கத்தக்கதே.
ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ள கட்சிகளின் தலைமைகளுக்கு முறைப்படி கடிதம் அளித்து, நோக்கத்தை எடுத்துச்சொல்லி, கூட்டத்திற்கு அவர்களை அனுப்பி வைக்கக் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும். அதை விடுத்து, நேரடியாக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்ததில் நிச்சயமாக ஒரு நெறிமீறல் இருக்கிறது. அந்த நெறிமீறலுக்கும் அரசியல் பயிற்சியின்மைதான் காரணமா?
இருந்தபோதிலும், நடைமுறைச் சடங்குகளைவிட நாட்டு நிலவரங்கள் தலையானவை என்ற புரிதலோடு கூட்டத்தில் கலந்துகொண்டிருக்க வேண்டும். அழைப்பு விடுத்ததில் உள்ள நெறிமீறலைச் சுட்டிக்காட்டிவிட்டு, எடுத்துக்கொண்ட பொருள் மீது பேசியிருக்க வேண்டும். தொகுதி மறுவரையறை சட்ட முன்வரைவு இன்னும் தாக்கல் செய்யப்படவே இல்லை. இந்த நிலையில் எதற்காக இந்தக் கூட்டம் என்று – குறிப்பாக அதிமுக தரப்பில் – கேட்கப்படுகிறது.
ஆனால், கடந்த ஏப்ரலில் போதிய பெரும்பான்மை கிடைக்காததால் தோற்கடிக்கப்பட்ட சட்ட முன்வரைவை, கொஞ்சம் ‘டிங்கரிங்’ வேலை செய்து மறுபடியும் கொண்டுவருவதற்கான முயற்சிகளை பா.ஜ.க முடுக்கிவிட்டிருப்பதாக வெளிப்படையாகத் தகவல்கள் வருகின்றன. அப்படியிருக்க, சட்ட முன்வரைவைக் தாக்கல் செய்த பிறகு பேசிக்கொள்ளலாம் என்று காத்திருப்பது முறைதானா? வருமுன் காப்பதற்குத் தயாராக வேண்டாமா?
ஒருவேளை அது உண்மை என்றே வைத்துக்கொள்வோம் – கூட்டத்தில் கலந்துகொண்டு அதை அம்பலப்படுத்தலாமே? தனது நிலைப்பாட்டில் மாற்றம் இருக்கிறதா இல்லையா என்று அங்கே உரத்து உரைக்கலாமே? வேறு சிலர் வேறு ஐயப்பாடுகளைப் பகிர்கிறார்கள். காங்கிரஸ் கட்சியுடனான முந்தைய உறவு முறிந்துவிட்டதால், திமுக இப்போது பாஜக–வுக்கு சாதகமாக நகரக்கூடும், சட்ட முன்வரைவை ஆதரிக்கக்கூடும் என்ற ஊகங்கள் அடிபடுகின்றன. இது உண்மையாக இருக்குமானால், காங்கிரஸ் மீதுள்ள (நியாயமான) கோபத்திற்காக மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்கிற செயல்களில் ஈடுபடலாமா என்ற கேள்வி எழுகிறது.
அனைத்து மாநிலங்களுக்கும் மக்களவை இடங்கள் 50 சதவிகிதம் உயர்த்தப்படும் என்பதாக பாஜக தலைவர்கள் கூறுகிறார்களாம். அப்படியானால், 816 உறுப்பினர்களாக அதிகரிக்கும் நிலையில், தமிழ்நாட்டுக்கான பிரதிநிதித்துவ விகிதம் குறையாது என்பதால் அதை ஏற்கலாம் என்ற கருத்தில் திமுக தலைவர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அது ஆதாரமற்ற ஊகமாகக் காற்றில் கரைந்துபோக வேண்டும் என்றே கூட்டாட்சிக் கோட்பாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் விரும்புகிறார்கள்.
ஏனென்றால், எண்ணிக்கை விதிதத்தைத் தாண்டி, அதைவிடவும் கவலைக்குரிய கூறுகள் தொகுதி மறுவரையறை நகர்வில் இருக்கின்றன. அதில், மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்கிறபோது, தமிழ்நாட்டிற்குக் கூடுதல் உறுப்பினர்கள் (59) கிடைப்பார்கள் என்றாலும், வட மாநிலங்களின் பிரதிநிதித்துவ பலம் கணிசமாக அதிகரித்துவிடும். அதைப் பயன்படுத்தி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்க்கக்கூடிய நடவடிக்கைகளைச் சட்டமாக்கிவிட முடியும், கூட்டாட்சிக் கோட்பாடு புறந்தள்ளப்படும் என்று அரசமைப்பு சாசனத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
தற்போதுள்ள ஏற்பாட்டிலேயே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தைக் கீழிறக்கி வேலைகளைக் குறைக்கிற விபி–ஜி ராம் ஜி என்று வேறொரு சட்டத்தைக் கொண்டுவர முடிகிறது. வந்தே மாதரம் தேசியப் பாடல் என்று கொண்டுவர முடிகிறது. தற்போதைய பலம் அதிகரிக்குமானால் வேறு எப்படிப்பட்ட சட்டங்கள் வருமோ?
ஒற்றை மதம் சார்ந்த நாடாக மாற்றுவதை நோக்கிய நகர்வுகளை எளிதாக்கக்கூடிய வாய்ப்பிருக்கிறது என்று, அரசமைப்பு சாசனம் கூறுகிற அரசின் மதச்சார்பின்மைத் தன்மையில் பிடிப்புள்ளவர்கள் அஞ்சுகிறார்கள்.
இத்தகைய ஆழமான, நாட்டின் எதிர்காலக் கட்டமைப்பு சார்ந்த அச்சங்கள் உள்ள சூழலில், அதற்கெல்லாம் இடமளிக்க மாட்டோம் என்று மக்களுக்கு உறுதியளிக்கும் மேடையாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைப் பயன்படுத்தியிருக்க முடியும். இதில் தமிழ்நாட்டு அரசியல் இயக்கங்கள் ஒன்றுபட்டிருக்கின்றன என்ற எண்ணத்தை ஒன்றிய ஆட்சியாளர்களுக்குத் தெரிவிப்பது மாநில நலன்களும் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதோடு தொடர்புள்ள அக்கறை. அப்படி ஒன்றுபட்டிருக்கவில்லை என்பதில் ஒன்றிய ஆளுங்கட்சி தனக்குச் சாதகம் என்று எடுத்துக்கொள்ளக்கூடிய ஒரு செய்தி இருக்கிறது.