📅 Wednesday, 26 August 2026 IST | ஆவணி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 24, 2026 08:00 PM

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றம் கர்நாடகாவைக் கேள்வி கேட்டது

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றம் கர்நாடகாவைக் கேள்வி கேட்டது

புதுடெல்லி: காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணையின்போது, தமிழகத்திற்குத் தண்ணீர் திறப்பதில் கர்நாடகாவுக்கு என்ன பிரச்சினை என்று இந்திய உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை மீண்டும் அணுகுமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், குறிப்பிட்ட காலத்தில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய உரிய பங்கு நீர் இன்னும் வந்தடையவில்லை என்றும் அணைகளில் உள்ள நீர்வரத்து, சேமிப்பை ஆய்வு செய்து உரிய காலத்தில் நீரைப் பகிர்ந்தளிக்கும் அதிகாரம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளித்த கர்நாடக தரப்பு வழக்கறிஞர் ஷியாம் திவான், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25) நடைபெறவுள்ளதாகவும் நீர்ப்பங்கீட்டில் தங்களுக்குப் பெரிய அளவில் எந்தச் சிக்கலும் இல்லை என்றும் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதிகள், கடந்த விசாரணையின்போது திறந்துவிடப்பட்ட தண்ணீர் தொடர்பான வரைபடத்தை கர்நாடகா சமர்ப்பித்துள்ளது என்று குறிப்பிட்டனர்.

மேலும், இரு மாநிலங்களும் தற்போதைய கள நிலவரம் குறித்த புதிய தகவல்களைத் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவதில் கர்நாடகாவுக்கு உள்ள சிரமங்கள் குறித்து மேலாண்மை ஆணையத்திடம் முறையிட தமிழக அரசுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.