📅 Wednesday, 07 October 2026 IST | புரட்டாசி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health October 07, 2026 08:04 PM

கிரிஸ்டல் ஜேட் நிறுவனம் மேலும் 4 உணவகங்களை மூடியது; 120 ஊழியர்கள் பணிநீக்கம்

கிரிஸ்டல் ஜேட் நிறுவனம் மேலும் 4 உணவகங்களை மூடியது; 120 ஊழியர்கள் பணிநீக்கம்

வணிக விற்பனைக்கு முன்னதாக மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ‘கிரிஸ்டல் ஜேட்’ உணவகக் குழுமம் சிங்கப்பூரில் உள்ள மேலும் நான்கு உணவகங்களை மூடியுள்ளது.இதனால், கிட்டத்தட்ட 120 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பூகிஸ் ஜங்ஷன், தோ பாயோ, i12 காத்தோங் ஆகிய இடங்களில் இயங்கி வந்த மூன்று ‘கிரிஸ்டல் ஜேட் லா மியான் சியாவோ லாங் பாவ்’ உணவகங்களும், பொங்கோலில் இயங்கி வந்த ‘கிரிஸ்டல் ஜேட் கோ’ உணவகமும் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 6) மூடப்பட்டன.

இதையடுத்து சிங்கப்பூரில் கிரிஸ்டல் ஜேட்டின் உணவகங்களின் எண்ணிக்கை ஒன்பதாகவும், ஊழியர் எண்ணிக்கை 210 ஆகவும் குறைந்துள்ளது.

மூடப்பட்ட உணவகங்கள், சில நிர்வாகப் பிரிவுகளில் பணியாற்றிய ஊழியர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குக் கடைசி நாள் வரையிலான சம்பளம் வழங்கப்படும் என்றும், ஒப்பந்தப்படி உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் சொத்து நிர்வாக நிறுவனமான ‘குரோல்’ தெரிவித்தது.

அத்துடன், சிங்கப்பூரில் ‘கிரிஸ்டல் ஜேட்’டின் வேறு உணவகங்கள் மூடப்படாது என்றும் அது கூறியது.

பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஆதரவு வழங்க தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் இணை அமைப்பான உணவு, பானத்துறை சார்ந்த ஊழியர்கள் சங்கத்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு 400க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க உணவுத் தயாரிப்பு, உபசரிப்பு, சில்லறை வணிகத் துறைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கிரிஸ்டல் ஜேட்டின் மத்திய சமையலறையும் அக்டோபர் 5ஆம் தேதி மூடப்பட்டது.