📅 Thursday, 10 September 2026 IST | ஆவணி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 10, 2026 01:34 PM

கொள்முதல் நிலையம் திறக்காததால் மழையில் நனையும் நெல்மணிகள் விவசாயிகள் வேதனை

கொள்முதல் நிலையம் திறக்காததால் மழையில் நனையும் நெல்மணிகள் விவசாயிகள் வேதனை

திருவாலங்காடு: களாம்பாக்கத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால், நெல்மணிகள் மழையில் நனைந்து முளைத்து வருகிறது. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

திருவாலங்காடு ஒன்றியம் களாம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சொர்ணவாரி பருவத்தில் பயிரிடப்பட்ட நெல், தற்போது அறுவடை செய்யப்பட்டு 15 நாட்களுக்கு மேலாகிறது. 2 லட்சம் கிலோவுக்-கும் மேலான நெல்மணிகளை, அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

இதனால், திறந்தவெளியிலேயே நெல்மணிகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. சில நாட்களாக, இரவு நேரங்களில் பெய்யும் மழையில் நனைந்து, நெல்மணிகள் முளைத்து வருகின்றன. கஷ்டப்பட்டு விளைவித்த நெல், கண்ணெதிரே மழையில் நனைந்து முளைத்து வருவதை கண்டு, விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:

கடந்தாண்டுகளில் உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டு அதிகாரிகள் தாமதப்படுத்தி வருகின்றனர். சில நாட்களாக இரவு நேரத்தில் பெய்யும் மழையில் நெல் மணிகள் அனைத்தும் நனைந்து விட்டன.

தார்ப்பாய் போட்டு மூடி வைத்தாலும், அடியில் ஈரம் புகுந்து நெல் மணிகள் முளைத்து வருகின்றன. எனவே, உடனே கொள்முதல் நிலையத்தை திறந்து, மழையால் பாதிக்கப்பட்ட நெல்மணிகளையும் கொள்முதல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.