கொளத்துார் தொகுதியில் தோல்வியை எதிர்த்து ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் அதிரடி
சென்னை: 'சென்னை கொளத்துார் தொகுதியில், த.வெ.க., வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றது செல்லாது' என அறிவிக்க கோரி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சட்டசபை தேர்தலில், சென்னை கொளத்துார் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க., தலைவர் ஸ்டாலின், த.வெ.க., வேட்பாளர் பாபுவிடம், 8,000க்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலின் தாக்கல் செய்த மனு:
சென்னை கொளத்துார் தொகுதியில், 14 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன. ஆறு ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களை ஒப்பிட்டு பார்த்ததில், பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டன.
எனவே, அனைத்து ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களையும் சரி பார்க்க உத்தரவிட வேண்டும். கொளத்துார் தொகுதியில், த.வெ.க., வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும்; என்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந் நிலையில், ஸ்டாலின் மனுவை நேற்று உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவு:
ஓட்டுப்பதிவு இயந்திரங்களை மீண்டும் சரி பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை மட்டுமன்றி, கொளத்துார் தொகுதி எம்.எல்.ஏ.,வின் வெற்றியை செல்லாது எனவும் தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் எனவும் மனுதாரர் கோரியிருப்பதால், அரசியல் சாசனத்தின்படி, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல.
அனைத்து ஓட்டுப்பதிவு இயந்திரங்களையும் சரி பார்க்க வேண்டும் என்ற வாதத்தை ஏற்றாலும்கூட, தேர்தல் வழக்கில் தான், அந்த கோரிக்கையை வைக்க முடியும்.
மனுதாரரின் கோரிக்கையை ஏற்றால், இரண்டாம், மூன்றாம் இடங்களை பிடித்தவர்கள், தேர்தல் வழக்குக்கு பதிலாக, இதுபோன்ற 'ரிட்' வழக்குகள் தாக்கல் செய்ய வாய்ப்பாகி விடும்.
தேர்தல் வழக்கு தாக்கல் செய்வதற்கான, 45 நாள் அவகாசம் முடிந்த பின், சரிபார்ப்பு பணிகள் நடந்ததால், இந்த வழக்கை தாக்கல் செய்ததாக கூறப்பட்ட மனுதாரரின் வாதம் உண்மையாக இருந்தாலும் கூட, தேர்தல் முடிவுகளை, 'ரிட்' வழக்குகளின் வாயிலாக கேள்வி எழுப்ப, அரசியல் சாசனம் விதித்துள்ள தடையை மீற முடியாது.
எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. சட்டப்படி, வேறு நிவாரணங்களை மனுதாரர் தேடிக் கொள்ளலாம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தி.மு.க., சட்டத்துறை செயலர் இளங்கோ கூறியதாவது: ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்குமாறு, கடந்த மே 7ல் தேர்தல் கமிஷனிடம் கேட்டோம். ஆனால், மூன்று மாதங்களுக்கு பின் சோதனை செய்தது. கொளத்துார் தொகுதியில், 19 ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சரிபார்த்ததில், 14 சரியாக இயங்குவதாக, தேர்தல் கமிஷன் அறிக்கை கொடுத்தது. எனவே, 5 இயந்திரங்கள் பழுதடைந்திருப்பதன் வாயிலாக, 33 சதவீத குறைபாடு உள்ளதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளோம். இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அல்லது உயர் நீதிமன்றத்திலேயே, மேல்முறையீடு செய்வது குறித்து, ஸ்டாலினிடம் ஆலோசித்து, அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதாகி இருந்தால், என்ன நடவடிக்கை என்பது குறித்த சட்ட சிக்கல், இந்தியாவிலேயே முதல்முறையாக கொளத்துார் தொகுதியில் தான் எழுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.