📅 Wednesday, 26 August 2026 IST | ஆவணி 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 26, 2026 07:04 AM

கர்நாடகாவிடம் கூடுதல் நீர் கேட்ட தமிழகம் : கைவிரித்தது காவிரி மேலாண்மை வாரியம்

கர்நாடகாவிடம் கூடுதல் நீர் கேட்ட தமிழகம் : கைவிரித்தது காவிரி மேலாண்மை வாரியம்

- நமது டில்லி நிருபர் -

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் அந்த கோரிக்கைக்கு செவி சாய்க்க மறுத்துவிட்டது.

காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழுவின் பரிந்துரைப்படி அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் இருந்து, 9,000 கனஅடி நீர் திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்துக்கு விகிதாசார அடிப்படையில் காவிரி நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று ( ஆக.,24) நடந்த விசாரணையின்போது, தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிடுவதில் கர்நாடகாவுக்கு என்ன பிரச்னை? என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அத்துடன், விகிதாசார அடிப்படையில் காவிரி நீரை பெற விரும்பினால், காவிரி மேலாண்மை வாரியத்திடம் முறையிடும்படி தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது.

அதே சமயம் காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழுவின் ஆலோசனை கூட்டமும் நேற்று நடந்தது. அதில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை அளவு, வானிலை நிலவரம், தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்ட நீர் விவகாரம், முந்தைய உத்தரவுகள் பின்பற்றப்பட்டதா என பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இறுதியாக, தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 9,000 கனஅடி நீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு, காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தது. எனினும், கூடுதலாக நீர் திறக்கக்கோரி தமிழக அரசு முறையிட்டது.

இதை தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் 56வது ஆலோசனை கூட்டம் டில்லியில் நடந்தது. இந்த கூட்டத்திலும், 'காவிரியில் இருந்து கூடுதல் நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, தமிழக அரசு முறையிட்டிருந்தது. எனினும், ஆலோசனை கூட்டத்தின் முடிவில், காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரைப்படியே தமிழகத்துக்கு வினாடிக்கு 9,000 கனஅடி நீர் திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு வாரியம் உத்தரவிட்டது.

கூடுதல் நீரை திறக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கைக்கு காவிரி நீர் மேலாண்மை வாரியம் செவி சாய்க்காதது தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உத்தரவின்படி கர்நாடக அரசு காவிரியில் நீரை திறந்துவிட்டால், தமிழகத்துக்கு 11.66 டி.எம்.சி., நீர் மட்டுமே கிடைக்கும் என கூறப்படுகிறது.