📅 Sunday, 11 October 2026 IST | புரட்டாசி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 11, 2026 02:03 AM

கரப்பான்பூச்சி கட்சியினர் விரட்டியடிப்பு!

கரப்பான்பூச்சி கட்சியினர் விரட்டியடிப்பு!

புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று போராட்டம் நடத்த வந்த கரப்பான்பூச்சி கட்சியினர் விரட்டியடிக்கப்பட்டனர். மும்பையில் இருந்து டில்லிக்கு புறப்பட்டு வந்த அக்கட்சியின் தலைவர் அபிஜித் தீப்கே மற்றும் அவரது கூட்டாளிகளை விமானத்தில் வைத்தே டில்லி போலீசார் கைது செய்தனர். தலைநகர் முழுதும், 25,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜந்தர் மந்தர் நோக்கி வந்த 5,000க்கும் மேற்பட்டோரை போலீசார் வளைத்து, வளைத்து பிடித்து தடுப்பு காவலில் வைத்ததால், போராட்டம் பிசுபிசுத்துப் போனது.

நாடு முழுதும் நடந்து வரும் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், குளறுபடிகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் ஆதாரங்கள் இல்லாமல் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார், எஸ்.ஐ.ஆர்., விவகாரத்தில் மற்ற தேர்தல் கமிஷனர்களிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சயைாக முடிவெடுத்ததாக சர்ச்சை வெடித்தது. இதனை தேர்தல் கமிஷன் மறுத்து உரிய விளக்கமும் அளித்திருந்தது.

எனினும், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்கக் கோரியும், எஸ்.ஐ.ஆர்., மூலம் ஓட்டு திருட்டு நடந்திருப்பதாக கண்டித்தும் எதிர்க்கட்சிகளின், ‘இண்டி’ கூட்டணி கடந்த சில நாட்களாக டில்லியில் போராட்டம் நடத்தி வருகிறது.

காங்கிரசை சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், அக்கட்சியின் எம்.பி., பிரியங்கா உள்ளிட்டோர் தேர்தல் கமிஷனருக்கு எதிராக நடத்திய போராட்டத்தின் போது தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இதனால், தலைநகர் டில்லி பரபரப்புடன் காணப்பட்டது. இந்நிலையில், தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டில்லி ஜந்தர் மந்தரில் நேற்று பிரமாண்ட போராட்டம் நடத்தப் போவதாக கரப்பான்பூச்சி கட்சி அறிவித்தது.

இதையொட்டி, நாடு முழுதும் இருந்து ஏராளமானோர் திரண்டு வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்திருந்தது. அதே சமயம், இந்த போராட்டத்துக்கு கரப்பான்பூச்சி கட்சி முறையாக அனுமதி பெறவில்லை என்றும், வெறுமனே போராட்டம் நடத்தப் போவதாக தகவல் மட்டுமே அளித்ததாகவும் டில்லி போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து பொது அமைதி மற்றும் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அத்துமீறி போராட்டம் நடத்த வருபவர்களை தடுக்க டில்லி முழுதும் 25,000 போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த போராட்டத்தில் பொதுமக்கள் யாரும் பங்கேற்க வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி இருந்தனர். டில்லியில் மக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களும் போலீசாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டன.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. நாடு முழுதும் இருந்து டில்லிக்கு வரும் 12க்கும் மேற்பட்ட ரயில்களும் நேற்று அதிரடியாக ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், மஹாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட கரப்பான் கட்சி தலைவர் அபிஜித் தீப்கே, அவரது சக கூட்டாளிகள் சவுரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா ஆகியோர் டில்லி வந்திறங்கியதும், விமானத்தில் வைத்தே அவர்களை டில்லி பெண் போலீசார் கைது செய்தனர்.

அப்போது, ‘கைதாவதற்காகவே டில்லிக்கு நான் வந்து இருக்கிறேன். அதற்காக விமானத்திலேயே கைது செய்ய வேண்டுமா?’ என அபிஜித் தீப்கே கேட்க, தடுப்பு காவலில் மட்டுமே கைது செய்து அழைத்து செல்கிறோம், கைது செய்யவில்லை என பெண் போலீசார் பதில் அளித்தனர்.

அப்போது விமானத்தில் அவர்கள் அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பிக் கொண்டே சென்றனர். ஆனால், அங்கிருந்த பொதுமக்களில் ஒருவர் கூட, அவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்ப முன்வரவில்லை.

முன்னதாக நேற்று காலை யூ டியூபர் துருவ் ரதி மற்றும் கரப்பான்பூச்சி கட்சியின் சட்டப் பிரிவு தலைவர் ரத்னா சிங் இருவரையும், அவர்களது வீட்டில் வைத்தே போலீசார் தடுப்பு காவலில் கைது செய்தனர். இதே போல், டில்லி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 5,000க்கும் மேற்பட்டோரை போலீசார் வளைத்து, வளைத்து பிடித்து தடுப்பு காவலில் வைத்தனர். இதனால், கரப்பான்பூச்சி கட்சி அழைப்பு விடுத்த போராட்டம் முழு தோல்வி அடைந்து பிசுபிசுத்து போனது.

இதற்கிடையே, கரப்பான்பூச்சி கட்சியினரின் போராட்டத்துக்கு ஆதரவாக, உச்ச நீதிமன்ற வளாகம் அருகே, போராட முயன்ற 60 வழக்கறிஞர்களை டில்லி போலீசார் தடுப்பு காவலில் கைது செய்தனர். மேலும், சில வழக்கறிஞர்களை அவர்கள் பணியாற்றும் நீதிமன்ற அறைக்கே சென்று தடுப்பு காவலில் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பிரதீப் ராய், ‘வழக்கறிஞர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்’ என, குரல் எழுப்பினார்.

மேலும், ‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும்’ என, கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி கேட்டுக் கொண்டதற்கிணங்க, தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

ஜனநாயகம் வென்றது’டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா நேற்று கூறியதாவது:டில்லியில் எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நடத்த திட்டமிட்டிருந்த போராட்டம் முழுதாக தோல்வி அடைந்துவிட்டது. தலைநகரை முடக்கி, வன்முறையை துாண்டிவிட நினைத்த அராஜகவாதிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. வன்முறையை துாண்டும் அரசியலுக்கு எதிராக ஜனநாயகம் வென்றுள்ளது.ஆங்கிலேயருக்கு எதிரான பிளாசி போரில் ஈடுபட்ட வங்காள நவாப் சிராஜ் உத் தவுலாவை வீழ்த்த அவருடன் இருந்த மிர் ஜபார் சதி செய்தார். அந்த மிர் ஜபாரை போலவே, வெளிநாட்டு சக்திகளுடன் கைகோர்த்து, தேர்தலில் வெற்றி பெறாமல், குறுக்கு வழியில் அதிகாரத்தை கைப்பற்ற காங்கிரசை சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் முயல்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

தடுப்புக் காவல்!மத்திய டில்லியில் இருந்து ஜந்தர் மந்தர் நோக்கி கட்சி எம்.பி.,க்களுடன் செல்ல முயன்ற திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜியை போலீசார் தடுத்து நிறுத்தி தடுப்புக் காவலில் கைது செய்தனர்.அதே போல், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டை சுற்றி வளைத்திருந்த போலீசார், அவர் போராட்டத்தில் பங்கேற்க புறப்பட்ட நிலையில், தடுப்பு காவலில் கைது செய்தனர்.அதே போல், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனையும் போலீசார் தடுப்பு காவலில் கைது செய்தனர்.

மக்களுக்கு தொந்தரவு!மும்பையில் இருந்து டில்லி வந்திறங்கிய கரப்பான்பூச்சி கட்சி தலைவர் அபிஜித் தீப்கே மற்றும் அவரது கூட்டாளிகளை விமானத்தில் வைத்தே, டில்லி போலீசார் நேற்று கைது செய்தனர். இந்நிலையில், விமானப் பயணியர், கரப்பான்பூச்சி கட்சியினரால், மக்களுக்கு பெரும் தொந்தரவு ஏற்பட்டதாக விமர்சித்தனர்.இது குறித்து பயணி ஒருவர் கூறியதாவது:நாங்கள் மும்பையில் இருந்து வந்த விமானம் டில்லியில் தரையிறங்கிய பிறகும், எங்களால் உடனடியாக விமானத்தில் இருந்து இறங்க முடியவில்லை. தேவையில்லாமல் விமானத்திற்குள்ளேயே, ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்ற முழக்கத்தை வேறு கரப்பான்பூச்சி கட்சி நிர்வாகிகள் எழுப்பிச் சென்றனர். இது பயணியரை முகம் சுளிக்க வைத்தது.இதற்கு முன் 36 நாட்கள் வரை அவர்கள் போராட்டம் நடத்தினர். ஆனால், ஒவ்வொரு இடத்திலும் மக்களுக்கு தொந்தரவாகவே இருக்கின்றனர். இப்படிப்பட்டவர்களால் மக்களுக்கு தான் பெரும் இன்னல் ஏற்படுகிறது.வாக்காளர் பட்டியலில் இருந்து தவறுதலாக பெயர் நீக்கப்பட்டு இருந்தால், அதை கவனிக்க உச்ச நீதிமன்றம் இருக்கிறது. இதில், இவர்களுக்கு என்ன வேலை இருக்கிறது. அனைத்தையும் போராட்டம் நடத்தி பொதுமக்களே முடிவு செய்து கொள்ளட்டும் என விட்டுவிட்டால், நீதிமன்றங்கள் எதற்கு, அனைத்தையும் மூடிவிடலாமே. அனைத்திற்கும் ஒரு விதி இருக்கிறது. அதை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அந்த பயணி கூறினார்.

கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் அபிஜித் தீப்கே டில்லியில் தடுப்பு காவலில் கைதான நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அவரது வீட்டில் நேற்று துக்க சம்பவம் நிகழ்ந்தது. தீப்கேவின் பாட்டி வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். இதனால், அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதற்கிடையே, விமானத்தில் வைத்து ஒரு பயங்கரவாதி போல தீப்கேவை டில்லி போலீசார் கைது செய்து இருப்பதாக அவரது தந்தை விமர்சித்துள்ளார்.