📅 Friday, 14 August 2026 IST | ஆடி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 14, 2026 04:03 PM

'குட் பை' சொல்ல தயக்கம் ஏன்? ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள் கடிதம்

'குட் பை' சொல்ல தயக்கம் ஏன்? ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள் கடிதம்

- நமது நிருபர் -

'தேர்தல் தோல்விக்கு காரணமான மாவட்டச் செயலர்கள் மீது நடவடிக்கை எடுக்க, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தயக்கம் காட்டக்கூடாது' என, அவருக்கு அக்கட்சி நிர்வாகிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

சட்டசபை தேர்தலில் தி.மு.க., அடைந்த தோல்விக்கு பின், கட்சி நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் செய்ய, கட்சியின் கள ஆய்வு குழு, மறுசீரமைப்பு குழு பரிந்துரைத்தது. கட்சியின், 78 மாவட்ட நிர்வாக அமைப்புகளை, 120க்கும் மேலாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஒரு மாவட்டச் செயலருக்கு, இரண்டு முதல் மூன்று சட்டசபை தொகுதிகள் ஒதுக்கும் வகையில் மாற்றம் செய்யப்படுகிறது. நீண்ட காலமாக மாவட்டச் செயலர் பதவியில் இருப்பவர்கள், வயது முதிர்ந்தவர்கள், தேர்தல் பணியில் கட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தியவர்கள் பதவி பறிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, அக்கட்சியில் நிலவுகிறது .

மாவட்டச் செயலர்களை மாற்றுவதிலும், இளைஞரணியைச் சேர்ந்தவர்களை நியமிப்பதிலும், ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலை வர் உதயநிதி, ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ஆகியோர் இடையே கருத்து வேறுபாடு உருவாகியுள்ளது. இதற்கிடையே, ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என, கட்சி தலைமை கூறியது.

ஆனால், இன்னும் சீரமைப்பு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு காரணம், செப்., 15ம் தேதி நடைபெற உள்ள தி.மு.க., முப்பெரும் விழா. அவ்விழா முடிந்த பின், கட்சி சீரமைப்பு நடவடிக்கை எடுக்க, ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், ஸ்டாலினுக்கு தி.மு.க., நிர்வாகிகள் எழுதியுள்ள கடிதம்: கள ஆய்வு குழு, மறு சீரமைப்பு குழு அறிக்கை வழங்கி, பல நாட்கள் ஆகியும், தேர்தல் தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்? இந்த தயக்கம் தான், தேர்தல் தோல்விக்கு முதல் காரணம்.

ஈரோடு மாவட்டச் செயலர் தோப்பு வெங்கடாசலத்தை நீக்கியதும், புது மாவட்டச் செயலரை உடனே அறிவித்திருக்க வேண்டும்.

மீண்டும் இரு தொகுதிகளை பிரித்து, பழைய மாவட்டச் செயலர்களிடமே தரப்பட்டுள்ளது. வேறு யாரை நியமிப்பது என்ற குழப்பமா; அந்த குழப்பமே, தலைமைக்கு மாவட்ட நிலவரம் தெரியவில்லை என்று தானே அர்த்தம்.

இவரை பதவியில் இருந்து நீக்கினால் வேறு கட்சிக்கு போய் விடுவாரோ; அவர் அதிருப்தி அடைவாரோ; அவருக்கு பதிலாக யாரை நியமிப்பது என்பது போன்ற தயக்கத்தையும், பயத்தையும் போக்காமல் மாற்றம் என்பது சாத்தி யமல்ல.

இதுகுறித்து, ஸ்டாலினும், உதயநிதியும் சிந்திக்க வேண்டும். மாவட்டச் செயலர்களை மாற்றம் செய்வது தொடர்பாக மீண்டும், 'பென்' நிறுவனத்திடம் ஆலோசனை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களிடம் ஆலோசனை கேட்டால், மறுபடியும் தங்களுக்கு வேண்டிய மாவட்டச் செயலர்களை பரிந்துரை செய்யும் வாய்ப்பு உள்ளது.

எனவே, நிர்வாகிகள் நியமனத்தில் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு, பழைய முகங்களுக்கு 'குட் பை' சொல்ல தயக்கம் காட்டக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.