குதிரை பேரத்தில் விலை போனவர்களுக்கு இடைத்தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்: பழனிசாமி ஆவேசம்
மதுராந்தகம்: ''த.வெ.க.,வின் குதிரை பேரத்தில் விலைபோன துரோகிகளுக்கு, இடைத்தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்,'' என, மதுராந்தகத்தில் நடந்த பிரசாரத்தின் போது, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.
மதுராந்தகம் பிரசாரத்தில் அவர் பேசியதாவது: த.வெ.க., அரசை காப்பாற்ற, முதல்வர் விஜயின் அறிவுறுத்தலில், மரகதம் குமரவேலை குதிரை பேரத்தில் விலை பேசி, ராஜினாமா செய்ய வைத்தனர். அதனால் தான், இந்த இடைத்தேர்தல் மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது.
ஓட்டு போட்ட மக்களை விற்று, உழைத்த நிர்வாகிகளை மறந்து, பணத்தாசையால் த.வெ.க.,வில் இணைந்த துரோகிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். இங்கு நான் நீதி கேட்டு வந்துள்ளேன். துரோகம் செய்யும் எண்ணம், இனி யாருக்குமே வரக்கூடாது. த.வெ.க.,வை டிபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். 12 நாட்களில் கட்சி மாறி துரோகம் செய்தவரை, ஆண்டவன் கூட மன்னிக்க மாட்டான்.
ஆனால், தேர்தலில் நிற்க வாய்ப்பு தரவில்லை என்றாலும், கணிதா சம்பத், அ.தி.மு.க.,வை உயிர்மூச்சாக கருதி கட்சிக்காக உழைத்தார். த.வெ.க.,வை தொடங்கிய மூன்று ஆண்டுகளில், இப்படி கேவலமான விஷயங்களை செய்யும் இவர்களா, துாய்மையான ஆட்சியை தருவர்? தனது உழைப்பால், ஆட்சி அமைத்தால், அது நல்ல நிர்வாகமாக இருக்கும்.
வெற்றி தோல்வியை விட, மக்கள் பிரச்னை குறித்தே அ.தி.மு.க., கவலைப்படும். ஆனால், த.வெ.க., நெல்லிக்காய் மூட்டை போன்றது; அவிழ்த்து விட்டால் சிதறி விடும். இன்று மதுராந்தகத்தில் வாய் கிழிய பேசும் ஜாம்பவான்கள், கரூர் சம்பவத்தின்போது எங்கே ஓடி ஒளிந்தீர்கள்? கரூர் சி.பி.ஐ., வழக்கு முழுமை பெறும் போது தான், த.வெ.க., இருக்குமா, இருக்காதா என்பது முடிவாகும்.
நான்கு மாத த.வெ.க., ஆட்சியில், தமிழகம் போராட்ட களமாகி விட்டது. கடும் மின்வெட்டிலும், மின் கட்டணம் அதிகரிக்கிறது. நான்கு மாதங்களில், 250 கொலைகள், 300 போக்சோ வழக்குகள் பதிவாகி உள்ளன. இது, எதுவுமே தெரியாத முதல்வர் விஜய், உல்லாசமாக வெளிநாடு செல்கிறார். இந்த ஆட்சியும், முதல்வரும், தமிழகத்துக்கு தேவைஇல்லை. இவ்வாறு பழனிசாமி பேசினார்.