📅 Monday, 31 August 2026 IST | ஆவணி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 31, 2026 11:03 PM

குட்டி சேவாக் என்று அழைக்கப்பட்ட இந்திய வீரர்.. இன்று வாய்ப்பில்லாமல் இங்கிலாந்து சென்ற சோகம்

குட்டி சேவாக் என்று அழைக்கப்பட்ட இந்திய வீரர்.. இன்று வாய்ப்பில்லாமல் இங்கிலாந்து சென்ற சோகம்

குட்டி சேவாக் என்று அழைக்கப்பட்ட இந்திய வீரர்.. இன்று வாய்ப்பில்லாமல் இங்கிலாந்து சென்ற சோகம்

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரரான மயங்க் அகர்வால், கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி நான்கு போட்டிகளில் விளையாடுவதற்காக டர்ஹாம் அணியில் இணைந்துள்ளார். இதன் மூலம், டர்ஹாம் அணியின் கேப்டனும், தனது முன்னாள் ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் சக வீரருமான பென் ஸ்டோக்ஸுடன் அவர் மீண்டும் இணையவுள்ளார்.

தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் பெடிங்ஹாமுக்கு மாற்றாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள மயங்க் அகர்வால், நார்தாம்ப்டன்ஷையர் அணிக்கு எதிரான போட்டியில் அறிமுக வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2025-26 ரஞ்சி கோப்பை தொடரில் மயங்க் அகர்வால் 42.37 சராசரியுடன் 678 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 12-வது இடத்தைப் பிடித்தார். எனினும், இந்த சீசனின் பாதியிலேயே கர்நாடக அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பேசிய டர்ஹாம் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரையான் கேம்ப்பெல் "எங்கள் கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க மயங்க் எங்களுடன் இணைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. டேவிட் பெடிங்ஹாம் தென் ஆப்பிரிக்காவிற்குத் திரும்பியதால், இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளுக்கு ஒரு தரமான சர்வதேச கிரிக்கெட் வீரரைத் தேர்ந்தெடுப்பது எங்களுக்கு அவசியமாக இருந்தது.

மயங்க் மிகச்சிறந்த திறமையுடைய பேட்ஸ்மேன் ஆவார். அவரது ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் சாதனைகளும் மிகச் சிறப்பாக உள்ளன. கவுண்டி சாம்பியன்ஷிப்பின் முதல் பிரிவுக்கு முன்னேறும் எங்கள் முயற்சிக்கு அவர் பெரும் பங்களிப்பை அளிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு ரஞ்சி கோப்பை போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம், கடந்த 2018-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மயங்க் அகர்வாலுக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது இந்திய அணியில் இடம்பெறாத போதிலும், 35 வயதான மயங்க் அகர்வால் இந்தியாவுக்காக 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 4 சதங்களுடன் 41.33 சராசரியுடன் 1488 ரன்கள் குவித்துள்ளார். மேலும், இவர் 5 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

ஒட்டுமொத்தமாக ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் 8929 ரன்களை அவர் எடுத்துள்ளார். இங்கிலாந்தில் இதுவரை சர்வதேச டெஸ்ட் போட்டி எதிலும் இவர் விளையாடியதில்லை என்றாலும், இங்கிலாந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு கடந்த சீசனில் யார்க்ஷயர் அணிக்காக கடைசி மூன்று போட்டிகளில் மயங்க் அகர்வால் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.