📅 Wednesday, 12 August 2026 IST | ஆடி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 12, 2026 10:04 AM

குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் வெட்டிக் கொன்ற வாலிபர்

குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் வெட்டிக் கொன்ற வாலிபர்

குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் வெட்டிக்கொன்ற கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை வண்ணாரப்பேட்டை இருசப்பன் மேஸ்திரி 2-வது தெருவைச் சேர்ந்தவர் சிவா (வயது 30), காசிமேட்டில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி வெண்ணிலா (23). இவர்களுக்கு 2 மகள்கள். ஒரு மகன் என 3 குழந்தைகள் உள்ளனர்.

சிவாவுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சிவா, குடிபோதையில் தனது மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

கணவரின் கொடுமையை தாங்க முடியாமல் வெண்ணிலா, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தனது 3 குழந்தைகளுடன் வியாசர்பாடியில் உள்ள தனது தாய் தேவி வீட்டுக்கு சென்றார். அங்கு மூர்த்திங்கர் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் வெண்ணிலா, அதே குடியிருப்பில் சி.பிளாக்கில் 3-வது மாடியில் உள்ள தனது அக்காள் மோகனா வீட்டில் இருந்தார். அப்போது மனைவியை பார்க்க சிவா அங்கு வந்தார். இருவரும் வீட்டில் பேசிக் கொண்டிருந்தபோது அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த சிவா, வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால் வெண்ணிலாவின் கழுத்தில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். வெண்ணிலாவின் அலறல் சத்தம் கேட்டு வெளியே இருந்த அவரது தாய் தேவி மற்றும் அக்காள் மோகனா ஆகியோர் வீட்டுக்குள் ஓடி சென்று பார்த்தனர். அப்போது அவர்களது கண் முன்னே ரத்த வெள்ளத்தில் வெண்ணிலா துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் எம்.கே.பி. நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வெண்ணிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மனைவியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சிவாவை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் வியாசர்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.