📅 Wednesday, 12 August 2026 IST | ஆடி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 12, 2026 01:04 PM

தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு உரிமைகளுக்காக இறுதிவரை களத்தில் நிற்போம்

தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு உரிமைகளுக்காக இறுதிவரை களத்தில் நிற்போம்

காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தொகுதி மறுவரையறை மசோதா

மக்களவை உறுப்பினர்களின் தற்போதுள்ள எண்ணிக்கையான 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைக்க வேண்டும். இந்த தொகுதிகளின் அடிப்படையிலேயே பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029 -ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, தமிழ்நாடு முதல்-அமைச்சர் கொண்டு வந்துள்ள, அரசின் தனித் தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி சார்பில் வரவேற்கிறேன், ஆதரிக்கிறேன்.

இந்த மசோதா சட்டமானால், மாநிலங்களுக்கு இடையிலான மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை வித்தியாசம் பல மடங்கு அதிகரிக்கும். இந்த போக்கை தடுத்து நிறுத்தத் தான் 1971 மக்கள் தொகை அடிப்படையில் தற்போதுள்ள 543 தொகுதிகளே நீடிக்க வேண்டுமென்ற வகையில் அன்று பிரதமராக இருந்த இந்திரா காந்தி, 1976 இல் அரசமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வந்து 2001 ஆம் ஆண்டு வரை நீட்டிக்க வேண்டுமென்று முடிவெடுத்தார். அதற்கு பிறகு 2001 ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த ஏ.பி.வாஜ்பாய் இதே நிலையை இன்னும் 25 ஆண்டுகளுக்கு 2026 வரை நீட்டிப்பு செய்தார். ஆனால், தற்போதுள்ள நரேந்திர மோடி அரசு, மக்கள் தொகை பெருக்கத்திற்கு இணையாக மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டுமென்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இதை நடைமுறைப்படுத்தினால் மாநிலங்களிடையே வேறுபாடு வளர்ந்து, சமநிலைத்தன்மை சீர்குலைந்து விடும்.

இந்த மசோதா சட்டமானால், ஒன்றிய அரசின் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி, மக்கள் தொகையைக் குறைத்த தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களுக்குத் தண்டனை கொடுத்தது போலவும், மக்கள் தொகையைக் குறைக்காத வட மாநிலங்களுக்குப் பரிசு கொடுத்தது போலவும் ஆகிவிடும். உத்தரப் பிரதேசம் - தமிழ்நாடு இடையிலான தொகுதிகளின் எண்ணிக்கை வித்தியாசம், 41இல் இருந்து 62 ஆக அதிகரிக்கும். மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், மாநிலங்களவை அதிகாரமற்றதாக மாறிவிடும்.

மக்களவையில் 815 எம்.பி.க்கள் இருந்தால், பெரும்பாலானோருக்குப் பேச வாய்ப்புக் கிடைக்காது. தனிப்பட்ட எம்.பி.யின் முக்கியத்துவம் குறைந்து, ‘ஒரு எம்.பி., ஒரு வாக்கு” என்பது அர்த்தமற்றதாகிவிடும். ஒட்டுமொத்தத்தில், தொகுதி மறுவரையறை சட்ட மசோதா, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தைப் பறித்துவிடும். மாநில சுயாட்சி, ஜனநாயகம், சமூக நீதி, சமத்துவம், மதச்சார்பின்மை ஆகிய நம் இந்திய அரசியலமைப்பின் உயரிய நோக்கங்களைக் குழிதோண்டிப் புதைத்துவிடும்.

இறுதிவரை களத்தில் நிற்போம்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.