கூட்டணி அரசியலில் எட்டப்பன் யார்? தி.மு.க.,
- நமது நிருபர் -
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மீது, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கோபமாக உள்ளதால், தமிழக காங்கிரஸ் கட்சியினர், ஸ்டாலினை 'எட்டப்பன்' என மறைமுகமாக விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக, முதல்வர் விஜய் தலைமையில், அனைத்து கட்சி எம்.பி.,க்கள் கூட்டம் நடந்தது.
இதில், காங்கிரஸ், வி.சி.க., இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் எம்.பி.,க்கள் பங்கேற்றனர். கூட்டத்தை, தி.மு.க., - அ.தி.மு.க, எம்.பி.,க்கள் புறக்கணித்தனர்.
இதுதொடர்பாக, தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கனிமொழி கூறுகையில், 'காவிரி விவகாரத்தை திசை திருப்பி, காங்கிரசை காப்பாற்றவே, முதல்வர் விஜய் தலைமையில் எம்.பி.,க்கள் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
'த.வெ.க., அரசை பின்னால் இருந்து இயக்குவது யார்; தேர்தலுக்கு பின் முதுகில் குத்திவிட்டு ஓடியவர்கள் யார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்' என, காட்டமாக விமர்சித்தார்.
இதற்கிடையே, 'காங்., ஆளும் மாநிலங்களில் தொகுதி மறுவரையறை விவகாரத்தை ராகுல் கண்டு கொள்வதில்லை.
'பிரதமர் மோடியை அடிக்கடி சந்திக்கும், 'இண்டி' கூட்டணி மூத்த தலைவர் சரத்பவாரை, ராகுல் விமர்சிப்பதில்லை. ஸ்டாலினை வன்மத்துடன் ராகுல் எதிர்க்கிறார்' என, தி.மு.க.,வினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், 'கூட்டணி அரசியலின் எட்டப்பன் யார்' என்ற தலைப்பில், காங்., வெளியிட்ட பதிவு: கடந்த 2004 முதல் 2014 வரை, மத்திய அமைச்சர் பதவிகளை அனுபவித்து விட்டு, ஆட்சி முடியும் நேரத்தில், 'கூடா நட்பு கேடாய் முடியும்' என, வெளியேறியது யார்?
தமிழகத்தில், கடந்த 2006 முதல் 2011 வரை, காங்., ஆதரவுடன் மைனாரிட்டி ஆட்சி நடத்தி விட்டு, 2014ல் கூட்டணியை உதறிவிட்டு, 2016ல் மீண்டும் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தது யார்?
2026 சட்டசபை தேர்தலில் காங்.,குடன் கூட்டணி வைத்துக்கொண்டே, காங்கிரசுக்கு எதிரான அரவிந்த் கெஜ்ரிவாலை, பிரசாரத்துக்கு அழைத்து வந்தது யார். 'எட்டப்பன் பட்டம் யாருக்கு கொடுக்க வேண்டும்' என்பதை தமிழக மக்கள் தீர்மானிப்பர். இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தி.மு.க., நிர்வாகிகள் கூறுகையில், 'கடந்த 2004ல் 'நேருவின் மருமகளே வருக, நிலையான ஆட்சி தருக' எனக் கூறி, சோனியாவை பிரதமர் வேட்பாளராக கருணாநிதி அறிவித்தார்.
கடந்த 2019ல் ராகுலை பிரதமர் வேட்பாளராக, ஸ்டாலின் தான் முதலில் பிரகடனம் செய்தார். 'லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு ராகுல் வருவதற்கு, தி.மு.க., - காங்., கூட்டணி வெற்றி தான் காரணம். அமைச்சர் பதவிக்காக த.வெ.க., பக்கம் ஓட முடிவு செய்த எட்டப்பன் யார் என்பது, தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும்' என்றனர்.
சென்னை மேடவாக்கத் தில், தமிழக காங்., தலைவர் மாணிக்கம் தாகூர் நேற்று அளித்த பேட்டி: தொகுதி மறுவரையறை விவகாரத்தில், தமிழகத்தின் உரிமை பறிபோகும் என தெரிந்தும், மோடி சொல்வதை கேட்டு, அதை ஆதரிக்கும் அ.தி.மு.க.,வும், பா.ம.க.,வும் நவீன எட்டப்பர்கள். இன்னும் அறியப்படாத எட்டப்பர்களும் உள்ளனர். அவர்களை விரைவில் வெளிச்சத்திற்குக் கொண்டு வருவோம். நான் பார்த்த ஐந்து முதல்வர்களில், அனைத்துக்கட்சி எம்.பி.,க்களையும் அழைத்து ஆலோசனை நடத்திய ஒரே முதல்வர், த.வெ.க., தலைவரான முதல்வர் விஜய் மட்டும் தான். அவரை, யாராலும் அழுத்தத்திற்கு உள்ளாக்க முடியாது. அவர் கூட்டிய கூட்டத்தை புறக்கணித்துவிட்டு, கொச்சையாக பேசுவது தான் தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். 'அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை; நண்பனும் இல்லை' என, தி.மு.க., முன்னாள் எம்.பி., கனிமொழி சோமு கூறுகிறார். அப்படி என்றால், 'தி.மு.க.,வின் புதிய நண்பர்கள் யார்' என்பதை தெளிவுபடுத்த வேண்டும். லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை பாராட்டிய த.மா.கா., தலைவர் வாசனை, கதர் சட்டை போட்ட, காங்கிரஸ்காரராகவே பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.