📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 04, 2026 12:03 PM

கூட்டுறவு பயிர்க்கடன் வசூல் நிறுத்தம்: தமிழக அரசு அறிவிப்பு

கூட்டுறவு பயிர்க்கடன் வசூல் நிறுத்தம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்க்கடன்களுக்கான நிலுவைத்தொகை வசூலிக்கப்படுவது முற்றிலும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூட்டுறவுத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், கூட்டுறவுச் சங்கங்களில் கடன் பெற்று நிலுவையில் வைத்துள்ள விவசாயிகளிடம் இருந்து கடன்களை வசூலிக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான சுற்றறிக்கை, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரால் அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கும் மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்களுக்கும் அனுப்பப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இருப்பினும், நிலுவையிலுள்ள பயிர்க் கடன்களை வசூலிக்க அதிகாரிகளோ அல்லது ஊழியர்களோ தங்களைத் தொடர்புகொள்வதாகச் சில விவசாயிகள் தரப்பிலிருந்து புகார்கள் வந்துள்ளன. எனவே, மீண்டும் ஒருமுறை தெளிவாகத் தெரிவிக்கப்படுவது யாதெனில், பயிர்க்கடன் வசூல் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது,” என கூட்டுறவுத்துறை அறிக்கை தெரிவிக்கிறது.

அரசு உத்தரவையும் மீறி, நிலுவைக் கடனைத் திரும்பச் செலுத்துமாறு கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த எவரேனும் விவசாயிகளைத் தொடர்புகொண்டால், அவர்கள் அச்சப்படத் தேவையில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.