மாநில அந்தஸ்துக்காக பதவியை ராஜினாமா செய்ய தயார்
மாநில அந்தஸ்துக்காக பதவியை ராஜினாமா செய்ய தயார் - பேரவையில் கொந்தளித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் அவசியம், அதற்காக எதையும் இழக்கத் தயார் என முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
Published : August 28, 2026 at 8:32 PM IST
புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்றால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என முதலமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது, புதுச்சேரிக்கு நீண்ட நாளாக மறுக்கப்படாமல் உள்ள மாநில அந்தஸ்தைப் பெற வேண்டியதன் அவசியத்தை முதல்வர் என்.ரங்கசாமி மிகத் தீவிரமாக வலியுறுத்தினார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முழுமையான அதிகாரம் கிடைப்பதற்கு மாநில அந்தஸ்து மட்டுமே ஒரே தீர்வு என்று குறிப்பிட்ட அவர், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படுமேயானால், தங்களின் உரிமைக்காக தனது முதலமைச்சர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்யவும் தயங்கப் போவதில்லை எனச் சட்டமன்றத்தில் அதிரடியாக அறிவித்துள்ளார்.
நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் அதிகாரம்
முந்தைய ஆட்சிக் காலத்தில் உச்ச நீதிமன்றம் வரை சென்று ஆளுநருக்கே அதிகாரம் உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டதால், நிர்வாகத்தில் தொடர்ந்து முட்டுக்கட்டைகள் ஏற்படுகின்றன.
அரசின் சிரமங்கள்
போதிய அதிகாரம் இல்லாததால், மக்களின் நலத்திட்டங்களைச் தாமதமின்றிச் செயல்படுத்துவதிலும், மாநிலத்தின் உள்கட்டமைப்பை வேகப்படுத்துவதிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கடும் சிரமங்களைச் சந்திக்கிறது.
அனைத்துக் கட்சிகளின் ஆதரவு
நிர்வாக ரீதியாக ஏற்படும் இத் தடைகளைச் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் உணர்ந்துள்ளதால், மாநில அந்தஸ்து கோருவதில் தற்போது எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
தொடர் தீர்மானங்கள்
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி சட்டமன்றத்தில் பலமுறை அதிகாரப்பூர்வத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன
பிரதமருடன் உரையாடல்
புதுச்சேரிக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்த போது, மாநில அந்தஸ்தின் அவசியத்தையும் அதிகாரமின்மையால் அரசு சந்திக்கும் சவால்களையும் தெளிவுபடுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
மாநில அந்தஸ்தைப் பெற இதுவே சரியான தருணம் என்பதால், இதற்காகத் தொடர்ந்து தீவிர அழுத்தம் கொடுக்கப்படும் என்றும், மாநிலத்தின் வளர்ச்சிக்காக எதையும் இழக்கத் தயார் என்றும் ரங்கசாமி உறுதியளித்துள்ளார்.
போர் குணத்தை காட்டுங்கள்
மாநில அந்தஸ்து கிடைக்க, முதலமைச்சர் ரங்கசாமி டெல்லி சென்று வலியுறுத்த வேண்டும் என புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள பல எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.