பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து... 1.5 ட்ரில்லியன் பொருளாதார இலக்கு அம்போவா?
பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து... 1.5 ட்ரில்லியன் பொருளாதார இலக்கு அம்போவா?
வளர்ந்துவரும் மிகப்பெரிய பொருளாதார மையமாக சென்னை இருந்தாலும், தற்போதைய விமான நிலையத்தின் திறன், கட்டமைப்பு வசதிகள் நகரத்தின் எதிர்காலத் தேவைகளுக்குப் போதுமானதாக இருக்குமா என்ற கேள்வி நீண்டகாலமாக இருந்துவருகிறது.
சென்னையை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்றுவந்த நிலையில், அந்தத் திட்டத்தை ரத்துசெய்வதாகச் சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் அதிரடியாக அறிவித்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விமான நிலையத் திட்டத்துக்கு எதிராகத் தொடர்ந்து போராடிவந்த பரந்தூர் பகுதி விவசாயிகளும், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களும் முதல்வரின் முடிவை வரவேற்றிருக்கின்றனர். அதேநேரத்தில், இந்தத் திட்டம் ரத்து செய்யப்படுவதால் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்படுவதுடன், தொழில் வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் பாதிக்கப்படும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆகவே, சென்னைக்கு மிகப்பெரிய விமானப் போக்குவரத்து கட்டமைப்பு தேவை என்ற முடிவுக்கு முந்தைய அரசு வந்தது. அதனால் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் முடிவையும் அரசு எடுத்தது. புதிய விமான நிலையம் என்பது வெறும் விமானங்களை இயக்குவதற்கான கட்டமைப்பு மட்டுமல்ல. அது ஒரு மிகப்பெரிய பொருளாதார முதலீட்டு மையமாகவும் உருவெடுக்கும் என்பதைத் தீர்மானித்துத்தான், விமான நிலையக் கட்டமைப்பை பரந்தூரில் ஏற்படுத்த முனைந்தது அரசு.
உதாரணமாக, விமான நிலையத்தைக் கட்டமைக்கும் பணியிலேயே பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் பல்வேறு துறைகளில் சுழலும். கட்டுமானப் பொருள்கள், சிமென்ட், இரும்பு, இயந்திரங்கள், போக்குவரத்து, பொறியியல் சேவைகள் உள்ளிட்ட பல துறைகளில் தேவை அதிகரிக்கும். இதன் மூலம் நேரடி வேலைவாய்ப்புகள் மட்டுமல்லாமல், மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாகும். புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டால், அதைச் சுற்றி ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள், கிடங்குகள், லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் வளர்ச்சி அடையும்.
போக்குவரத்து வசதிகள் மேம்படும் போது புதிய முதலீடுகளும் வரக்கூடும். அதன் மூலம் வேலைவாய்ப்புகள், வருமானம், நுகர்வு, பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கும். தமிழக அரசின் தற்போதைய முடிவால், இவை அனைத்தும் பாதிக்கப்படும். மேலும், தமிழக அரசு எடுத்திருக்கும் அரசியல்ரீதியான இந்த முடிவு, முதலீட்டாளர்களின் நம்பிக்கை, அரசின் கொள்கை நிலைத்தன்மை, பொதுநிதிப் பயன்பாடு, வேலைவாய்ப்பு, நீண்டகாலப் பொருளாதார வளர்ச்சி என அனைத்தையும் கடுமையாக பாதிக்கும்” என்றார் .
இது குறித்து இந்திய தொழில்முனைவோர் சங்கத்தின் தேசியத் தலைவர் கே.இ. ரகுநாதனிடம் பேசினோம். “பரந்தூர் விமான நிலையத் திட்டம், ரெடி-டு-லாஞ்ச் நிலையில் இருந்த திட்டம். நிதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன, முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன, தேவையான அனுமதிகளும் பெறப்பட்டுவிட்டன. இனி கட்டுமானப் பணியைத் தொடங்கினால் போதும் என்ற நிலையில் இருந்த ஒரு திட்டத்தை திடீரென்று நிறுத்துகிறார்கள். இந்த முடிவின் மூலம் ரூ. 27,000 கோடி முதலீட்டையும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் உருவாகவிருந்த மிகப்பெரிய பொருளாதாரச் சுழற்சியையும் நாம் இழக்கிறோம்.
ஒரு விமான நிலையம் வந்தால் அதைச் சுற்றி ஒரு புதிய பொருளாதார மண்டலமே உருவாகும். ஹோட்டல்கள், ஹாஸ்பிட்டாலிட்டி துறை, உணவகங்கள், அலுவலகங்கள், கிடங்குகள், ஸ்டோரேஜ் யார்டுகள், ஏற்றுமதி நிறுவனங்கள், லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்கள், ஃப்ரெய்ட் ஃபார்வர்டிங் ஏஜென்ட்டுகள், கன்டெய்னர் ஹேண்ட்லிங் உள்ளிட்ட ஏராளமான துணைத் தொழில்கள் உருவாகும். இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும். அது மட்டுமல்லாமல், மெட்ரோ ரயில் இணைப்பு, சாலை வசதிகள், புதிய வணிக மையங்கள் என அந்தப் பகுதியே ஒரு தனி நகரமாக வளரக்கூடிய வாய்ப்பு இருந்தது. அதை நாம் இழந்துவிட்டோம்” என்று கவலையுடன் கூறினார் கே.இ. ரகுநாதன்.
விஜய் தலைமையிலான த.வெ.க அரசு பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்துக்கு வரவேண்டிய சில முக்கியத் தொழில் முதலீடுகள் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்குச் செல்வதாக விமர்சனங்கள் எழுந்துவருகின்றன. இந்த நிலையில், சென்னையின் தொழில் வளர்ச்சிக்கு முக்கியமானதாகக் கருதப்பட்ட பரந்தூர் விமான நிலையத் திட்டத்தையும் தமிழக அரசு ரத்துசெய்திருப்பது, அந்த விமர்சனங்களை மேலும் தீவிரப்படுத்தியிருக்கிறது.
இவ்வளவு பெரிய திட்டத்தை ரத்துசெய்துவிட்டு `1.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாகத் தமிழகத்தை மாற்றுவோம்’ என்ற இலக்கை விஜய் அரசு எப்படி எட்டப்போகிறது என்பதுதான் ட்ரில்லியன் டாலர் கேள்வி.