📅 Saturday, 29 August 2026 IST | ஆவணி 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 28, 2026 11:04 PM

மாநிலம் முழுதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி; சோதனை கட்டுக்கட்டாக சிக்கியது பணம்

மாநிலம் முழுதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி; சோதனை கட்டுக்கட்டாக சிக்கியது பணம்

சென்னை: திருநெல்வேலி, புதுக்கோட்டை, அரியலுார், துாத்துக்குடி உள்ளிட்ட, 38 இடங்களில் உள்ள அரசு அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, கணக்கில் வராத, 28.24 லட்சம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

பண பரிவர்த்தனை செயலியான, 'கூகுள் பே' வாயிலாக, 90 லட்சம் ரூபாய் அனுப்பி இருப்பதையும் கண்டறிந்தனர்.

திருநெல்வேலி மகாராஜ நகரில் உள்ள மருந்து கட்டுப்பாட்டுத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.

அப்போது கணக்கில் வராத, 65,700 ரூபாயை பறிமுதல் செய்தனர். சோதனையின் போது, உதவி இயக்குநர் முகமது கமாலை சந்திக்க வந்த, மூன்று மருந்து கடை உரிமையாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் சார் - பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தி, கணக்கில் வராத, 1.86 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், குளத்துார் சார் - பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலையில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினர்.

அங்கு, சார் - பதிவாளர் சேதுராமகிருஷ்ணன், 49, அறை உள்ளிட்ட இடங்களில் இருந்து, 1.10 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அரியலுார் வட்டாட்சியர் அலுவலகத்தில், நேற்று மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, வண்டல் மண் அனுமதி தொடர்பாக, தற்காலிக ஊழியர் ஒருவரின் வங்கி கணக்கிற்கு கடந்த இரண்டு மாதங்களில், 'கூகுள் பே' வாயிலாக, 7.24 லட்சம் ரூபாய் பணப் பரிமாற்றம் நடந்தது தெரியவந்தது. அங்கு, 19,000 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.

துாத்துக்குடி மாவட்டம், கடம்பாகுளத்தில் உள்ள அரசு மீன் குஞ்சு வளர்ப்பு பண்ணையில் நடந்த சோதனையில், மீன்வளத் துறை உதவி இயக்குநர் உத்தரண்டராமன், உதவி ஆய்வாளர் சேரந்தைராஜா ஆகியோர் மேஜையில் இருந்து, 1.56 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

சென்னையில், பல்லாவரம் சார் - பதிவாளர் அலுவலகத்தில், 1.50 லட்சம் ரூபாயும், ராயபுரம் சார் - பதிவாளர் அலுவலகத்தில், 9,500 ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

ஒட்டுமொத்தமாக, சென்னை, காஞ்சிபுரம், வேலுார், ராணிப்பேட்டை என, 38 இடங்களில் உள்ள சார் - பதிவாளர், வட்டார வளர்ச்சி அலுவலகம் என, பல்வேறு அரசு அலுவலகங்களில் நேற்று சோதனை நடத்தினர்.

இதில், கணக்கில் வராத, 28.24 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 'கூகுள் பே' வாயிலாக, அரசு அதிகாரிகளுக்கு, 90 லட்சம் ரூபாய் அனுப்பப்பட்டு இருப்பதையும் போலீசார் கண்டறிந்தனர்.

தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.