சட்டசபையில் விஜய் திடீரென இடம் மாறி அமர்ந்தது ஏன்?
சட்டசபையில் விஜய் திடீரென இடம் மாறி அமர்ந்தது ஏன்? - அமைச்சர் செங்கோட்டையன் பதில்
சட்டப்பேரவையில், நேற்றைய தினம் முதல்வர் விஜய் திடீரென இடம் மாறி, தனது அருகில் அமர்ந்தது ஏன் என்பது குறித்த கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.
நேற்று பேரவைக்கு வந்த முதல்வர் விஜய், வழக்கமாக தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள தனி இருக்கையில் அமராமல் அமைச்சர்கள் வரிசைக்கு சென்றார். அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் கே. செங்கோட்டையன் ஆகியோருக்கு இடையில் அமர்ந்தார். அவை முன்னவரான செங்கோட்டையனிடம் அவர் மிகவும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்நிலையில் திடீரென முதலமைச்சர் இடம் மாறி அமர்ந்தது ஏன்..? என விளக்கம் அளித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன், “முதலமைச்சர், எல்லோரையும் உற்சாகப்படுத்த வேண்டும் என விரும்புகிறார். ஒரு முதலமைச்சர் இந்த அளவிற்கு நடந்துகொள்கிறாரா..? என்ற நிலை மாறி, அனைவரும் உற்சாகமாகப் பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் அவர் ஒரு மணி நேரம் அமர்ந்தார். முதல்வர் விஜய் ஒவ்வொரு இடத்திற்கும் நேரில் சென்று ஆய்வு செய்து, உடனுக்குடன் மக்கள் நல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவருடைய ஒரே நோக்கம், தமிழக மக்களுக்குச் சிறந்த நல்லாட்சியை வழங்கி, ஒட்டுமொத்த இந்தியாவிற்கே தமிழகத்தை ஒரு முன்னோடி மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் முதல்வரின் நோக்கம். அதனால்தான் அன்று மெட்ரோவில் ஆய்வு, இன்று சிறை, காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொரு துறையாக நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுவருகிறார்” என்றார்.