📅 Saturday, 05 September 2026 IST | ஆவணி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 04, 2026 09:05 PM

மாணவியை கிண்டல் செய்ததால் தகராறு: தம்பிக்கு பதிலாக அண்ணனை அடித்துக்கொன்ற கொடூரம்: கும்பல் வெறிச்செயல்

மாணவியை கிண்டல் செய்ததால் தகராறு: தம்பிக்கு பதிலாக அண்ணனை அடித்துக்கொன்ற கொடூரம்: கும்பல் வெறிச்செயல்

திருவொற்றியூர்,

கல்லூரி மாணவியை கிண்டல் செய்ததை தட்டிக் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் தம்பிக்கு பதிலாக அண்ணனை அடித்துக்கொன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தட்டிக்கேட்டதால் தகராறு

சென்னை திருவொற்றியூர் சார்லஸ் நகரைச் சேர்ந்தவர் சுனில் (வயது 22). இவர் கடந்த 30-ந் தேதி அதே பகுதியில் உள்ள அண்ணாமலை ரெயில்வே கேட் வழியாக நடந்து சென்ற போது, அவருடன் பேசிக்கொண்டு வந்த கல்லூரி மாணவியை அங்கு நின்றிருந்த ஒரு கும்பல் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை சுனில் தட்டிக்கேட்டதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

அண்ணனை வழிமறித்த கும்பல்

இதையடுத்து அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து சென்று மது அருந்திவிட்டு மீண்டும் அண்ணாமலை ரெயில்வே கேட் பகுதிக்கு வந்தனர். நள்ளிரவில் அந்த வழியாக சுனிலின் அண்ணன் முனீஸ்வரன் (34) நடந்து சென்றார்.

அவரை வழிமறித்த கும்பல், சுனில் எங்கே? என்று கேட்டது. அதற்கு முனீஸ்வரன், தனக்கு தெரியாது என கூறினார். இதனால் ஏற்பட்ட வாய்த்தகராறில் ஆத்திரமடைந்த கும்பல்,மறைத்து வைத்திருந்த கட்டையால் முனீஸ்வரனை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியது.

சிகிச்சை பலனின்றி

இதுகுறித்து சாத்தாங்காடு போலீசார் முதலில் அடிதடி வழக்குப்பதிவு செய்து, எண்ணூர் தாழங்குப்பம் குடியிருப்பைச் சேர்ந்த லோகேஷ்வரன் (21), ஜான்சன் (19), ஜெயந்தன் (19) மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

இந்தநிலையில் முனீஸ்வரன் உயிரிழந்ததை தொடர்ந்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.