📅 Wednesday, 30 September 2026 IST | புரட்டாசி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 30, 2026 12:03 PM

மேகமலை விவகாரம்

மேகமலை விவகாரம்

மேகமலை விவகாரம் - கும்மியடித்து கோரிக்கைகளை வலியுறுத்திய மலைக்கிராம மக்கள்

போராட்டத்தின் நான்காவது நாளான இன்று ஆயிரக்கணக்கான மலைக்கிராம மக்கள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Published : September 29, 2026 at 10:04 PM IST

தேனி: மேகமலை புலிகள் காப்பகத்தை காரணம் காட்டி தேனி மாவட்டத்தில் உள்ள 98 மலைக்கிராம மக்களை வனத்துறையினர் வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மலைக்கிராமங்களை சேர்ந்த பெண்கள் கும்மியடித்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர்.

மேகமலை புலிகள் காப்பகத்தை காரணம் காட்டி தேனி மாவட்டத்தில் உள்ள 98 மலைக்கிராம மக்களை வெளியேற்ற வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற வருசநாடு மலை கிராம மக்களின் காத்திருப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடமலை - மயிலை ஒன்றியத்தில் உள்ள, கடமலைக்குண்டு வருசநாடு, மயிலாடும்பாறை உள்ளிட்ட நகர் பகுதிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப்புறங்களிலும், டீக்கடை, ஹோட்டல், மளிகைக்கடை உள்ளிட்ட பெரும்பாலான கடைகளை அடைத்து வணிகர் சங்கம், ஹோட்டல் சங்கம் உள்ளிட்ட அனைவரும் சேர்ந்து மலை கிராம மக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் கும்மி அடித்து நடனமாடி தங்களது கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். இந்த போராட்டத்திற்கு "தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்" ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநிலத் தலைவர் ஈசன் முருகசாமி பேசுகையில், "இந்த விவகாரத்தில், உச்சநீதிமன்றம் எதிராக தீர்ப்பு அளித்தாலும் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் சட்டத் திருத்தம் செய்து நமது உரிமைய நிலைநாட்ட முடியும். தமிழக அரசும் சட்ட திருத்தம் செய்து மலை கிராம மக்களின் உரிமைகளை காக்க வேண்டும்.

மேகமலை, வருஷநாடு மலைக்கிராம மக்களுக்கு பிரச்சினை என்று வந்தால் தமிழகம் முழுவதும் உள்ள 100 விவசாய சங்கங்களை திரட்டி, தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம்" என தெரிவித்தார்.