மேகதாது அணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி கர்நாடகாவில் இன்று ஒருநாள் கன்னட அமைப்புகள் பந்த் அறிவிப்பு
மேகதாது அணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி கர்நாடகாவில் இன்று ஒருநாள் கன்னட அமைப்புகள் பந்த் அறிவிப்பு
ஓசூர்: மேகதாது அணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி கர்நாடகாவில் இன்று ஒருநாள் கன்னட அமைப்புகள் பந்த் அறிவித்துள்ளது. ஓசூரில் இருந்து கர்நாடகாவுக்கும், கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் குறைவான எண்ணிக்கையிலேயே பயணிகள் உள்ளனர்
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட வேண்டும் மற்றும் தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்புகள் இன்று கர்நாடகா முழுவதும் ஒருநாள் பந்த் (முழு அடைப்பு) போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த 12 மணி நேர பந்த் நடைபெறுகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.
காவிரி நதிநீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. கர்நாடகத்தில் இந்த ஆண்டு கடந்த ஜூலை மாதம் போதிய அளவு பருவ மழை பெய்யவில்லை. இதனால் காவிரி படுகையில் உள்ள அணைகள் நிரம்பவில்லை. இதற்கிைேடய, கடந்த மாதம் (ஜூலை) தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 3,500 கனஅடி தண்ணீர் திறந்து விட கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
இதற்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தன. குறிப்பாக கன்னட கூட்டமைப்புகளின் தலைவரான வாட்டாள் நாகராஜ், காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்டு 13-ந் தேதி (அதாவது இன்று) பந்த் நடத்த அழைப்பு விடுத்தார். இதற்கு பல்வேறு கன்னட அமைப்புகள், வாடகை கார், ஆட்டோ ஓட்டுனர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தது.
கர்நாடகவில் பந்த் நடத்த கடந்த மாதம் 31-ந் தேதி அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு, காவிரி படுகையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர்) அணை தவிர்த்து மற்ற 3 அணைகளும் (கபினி, ஹாரங்கி, ஹேமாவதி) நிரம்பும் தருவாயில் உள்ளது. அணைகளுக்கு தண்ணீர்வரத்தும் அதிகரித்துள்ளதால், காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் பந்த் நடத்த ஆதரவு அளிக்கும்படி கோரி பெங்களூருவில் உள்ள வணிக வளாகங்கள், ஓட்டல்கள், கடைகளுக்கு கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் நேற்று வேண்டுகோள் விடுத்தார். பின்னர் மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அவரை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக வாட்டாள் நாகராஜ் நிருபர்களிடம் கூறுகையில், காவிரி நதிநீர், மேகதாது உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக பந்த் நடத்த அழைப்பு விடுத்தோம். கடந்த மாதம் கன்னட அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆதரவு அளித்தனர். அப்போது ஆதரவு கூறிவிட்டு, எனது நண்பர்கள் இப்போது ஆதரவு அளிக்க மறுக்கிறார்கள். யார் ஆதரவு அளித்தாலும், அளிக்காவிட்டாலும், கர்நாடகத்தில் இன்று பந்த் நடப்பது உறுதி, என்றார்.