📅 Sunday, 30 August 2026 IST | ஆவணி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 29, 2026 06:04 PM

மேட்டூர் அணை நீர் மட்டம் 194 நாட்களுக்குப் பின் 90 அடியை எட்டியது!

மேட்டூர் அணை நீர் மட்டம் 194 நாட்களுக்குப் பின் 90 அடியை எட்டியது!

மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர் வரத்தால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 194 நாட்களுக்குப் பிறகு மீண்டும் 90 அடியை எட்டியுள்ளது.

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பி, அவற்றில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர் வரத்து அதிகரித்து இருந்த நிலையில், கடந்த 2 நாட்களாக நீர்வரத்து சரிந்து, மீண்டும் அதிகரித்துள்ளது.

அணைக்கு நீர்வரத்து இன்று காலை விநாடிக்கு 6,702 கன அடியாக இருந்த நிலையில், மாலையில் விநாடிக்கு 7,022 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 2,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட, நீர் திறப்பு குறைவாக இருப்பதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

அணையின் நீர்மட்டம் இன்று காலை 89.95 அடியாக இருந்த நிலையில், மாலை 90.07 அடியாக உயர்ந்தது. அதேபோல், நீர் இருப்பு 52.59 டிஎம்சியில் இருந்து 52.73 டிஎம்சியாக உயர்ந்தது.

கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி, அணையின் நீர்மட்டம் 90.07 அடியாகவும், நீர் இருப்பு 52.73 டிஎம்சியாகவும், நீர்வரத்து 27 கன அடியாகவும் இருந்தது. தற்போது, 194 நாட்களுக்கு பிறகு, அணையின் நீர்மட்டம் மீண்டும் 90 அடியை எட்டியுள்ளது குறிப்பிடதக்கது.