📅 Wednesday, 16 September 2026 IST | ஆவணி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 16, 2026 10:34 PM

'மிசா' குறித்த அமைச்சர் நிர்மல் குமாரின் பேச்சு

'மிசா' குறித்த அமைச்சர் நிர்மல் குமாரின் பேச்சு

'மிசா' குறித்த அமைச்சர் நிர்மல் குமாரின் பேச்சு - டிஜிபியிடம் திமுக எம்பி திருச்சி சிவா புகார்

ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, அமைச்சர் நிர்மல்குமார் தவறான கருத்துகளை வெளியிட்டு வருகிறார். வரலாறுகளை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதை அவர் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Published : September 16, 2026 at 9:16 PM IST

சென்னை: மிசா விவகாரத்தில் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் அல்லது பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் நிர்மல்குமார் பேசி வருவதாகக் கூறி தமிழ்நாடு டிஜிபியிடம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா புகாரளித்தார்.

சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு டிஜிபி தலைமை அலுவலகத்தில், அமைச்சர் நிர்மல்குமார் மீது திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா இன்று புகார் அளித்தார்.

பின்னர் அவர் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, அவசரநிலையைப் பிரகடனப்படுத்தினார். அந்த காலகட்டத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு, விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டனர். பத்திரிகை சுதந்திரமும் கட்டுப்படுத்தப்பட்டது. இதுதவிர, அடிப்படை உரிமைகளும் பறிக்கப்பட்டன.

குறிப்பாக பொதுக்கூட்டங்கள் நடத்தகூட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த காலகட்டத்தில் திமுகவும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணியில் இருந்தன. தமிழ்நாட்டில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான ஆட்சி நடைபெற்றது.

அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட 48 மணி நேரத்திற்குள், கூட்டணியில் இருந்தபோதிலும் திமுக செயற்குழு கூட்டி, 'அவசரநிலையைத் திரும்பப் பெற வேண்டும், கைது செய்யப்பட்ட தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும், பத்திரிகை தணிக்கையை ரத்து செய்து ஜனநாயக உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்' என தீர்மானம் நிறைவேற்றியது.

இந்த நடவடிக்கைகள் தொடர்பான செயற்குழு தீர்மானங்கள் மற்றும் கூட்டக் குறிப்புகள் திமுகவின் வரலாற்றுப் பதிவுகளில் இடம்பெற்றுள்ளன. மேலும், திமுகவின் தீர்மானத்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணமாக கூறி, ஆட்சி கலைக்கப்பட்டது. ஆட்சி கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, திமுகவின் முன்னணி நிர்வாகிகள் பலர் கைது செய்யப்பட்டனர். அந்த கைதுகள் தொடர்பான செய்திகள் பத்திரிகைகளில் முழுமையாக வெளியாக முடியாத சூழல் இருந்தது.

அப்போது, கருணாநிதியின் கோபாலபுர இல்லத்திற்கு போலீசார் வந்து, மு.க.ஸ்டாலினை கைது செய்தனர். பின்னர், சிறையில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கைதிகள் கடுமையாக தாக்கப்பட்டனர். அந்தத் தாக்குதலில் சிட்டிபாபு குறுக்கிட்டு அடிகளைத் தாங்கியதன் காரணமாக அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, பின்னர் சிறையிலேயே உயிரிழந்தார். அதே காலகட்டத்தில் நானும் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் இருந்தேன். ஸ்டாலின் ஓராண்டு முழுவதும் சிறையில் இருந்தார்.

இந்த வரலாற்று நிகழ்வுகளை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமாகி உள்ளது.

இந்தமாதிரியான சூழலிலேயே ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, அமைச்சர் நிர்மல்குமார் தொடர்ந்து தவறான கருத்துகளை வெளியிட்டு வருகிறார். வரலாற்று நிகழ்வுகளை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதை அவர் தவிர்க்க வேண்டும்.

மிசாவில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்றும், அதற்கான சான்றுகள் இல்லை என்றும் அவர் தொடர்ந்து கூறி வருகிறார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக கடந்துவிட்ட நிலையில், யாருடைய தியாகத்தையும் கொச்சைப்படுத்திப் பேசக் கூடாது. அரசியலில் விமர்சனங்களை முன்வைக்கலாம். ஆனால் அதற்கும் ஒரு எல்லை இருக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் பேசும்போதும், பொதுமேடைகளிலும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வருகிறோம். ஆட்சிப் பொறுப்புகள் நிரந்தரமானவை அல்ல. ஜனநாயகத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் எதிர்க்கட்சிக்கும், எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் ஆட்சிக்கும் வருவது இயல்பானது. அண்ணா, காமராஜர், இந்திரா காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர். இதை ஜனநாயகத்தின் இயல்பாக ஏற்றுக்கொள்ளும் மனநிலை எங்களுக்கு உள்ளது.

அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 'பொதுமக்கள் மத்தியில் குழப்பம் அல்லது பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் நிர்மல்குமார் பேசினால், அதுதொடர்பாக உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் கோரியுள்ளோம்" என்று திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.