📅 Wednesday, 23 September 2026 IST | புரட்டாசி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 23, 2026 07:01 PM

மீண்டும் உருவெடுக்கும் ஊழல் வழக்கு...மோடி கையில் வேலுமணியின் வாழ்வு?

மீண்டும் உருவெடுக்கும் ஊழல் வழக்கு...மோடி கையில் வேலுமணியின் வாழ்வு?

மீண்டும் உருவெடுக்கும் ஊழல் வழக்கு...மோடி கையில் வேலுமணியின் வாழ்வு?

அதிமுக மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு பிரதமர் அலுவலகத்தின் முடிவிற்காக எதிர்நோக்கியுள்ள நிலையில், இது அவருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடியாக இருப்பதால் விரக்தியிலும் குழப்பத்திலும் தவிக்கிறார் வேலுமணி, தற்போதைய சூழலில் வேலுமணியின் அரசியல் எதிர்காலமே பிரதமர் அலுவலகம் எடுக்கவிருக்கும் முடிவுகளில்தான் இருக்கிறது என சொல்லப்படுவதுதான் கொங்கு அரசியலில் ஹாட் டாபிக்!

ஜெயலலிதாவுக்குப் பிந்தைய அ.தி.மு.க.வின் தலைமை பீடத்தில் இரண்டாவது வரிசையில் கோலோச்சியவர் எஸ்.பி.வேலுமணி. இ.பி.எஸ். காலத்திலும் அவருக்கு அடுத்த அதிகார மையமாக இருந்த வேலுமணியின் அரசியல் கணக்குகள் கை கொடுத்திருந்தால் அதிமுகவின் பொதுச்செயலாளராகவே அவர் ஆகியிருப்பார் என்பார்கள்.

அப்படிப்பட்டவருக்கு இன்று, 'அதிருப்தி அதிமுக எம்.எல்.ஏ. எனும் பட்டம் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. சொந்த மாவட்டமான கோவையிலேயே வேலுமணி தனிமரமாக நிற்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. இப்படி அவர் மனம் நொந்து போயிருக்கும் சூழலில்தான், பழைய வழக்கு எனும் நாகம் ஒன்று அவருக்கு எதிராக படமெடுத்துள்ளது.

இதுபற்றி உள் விவரம் அறிந்த சிலரிடம் பேசினோம். கடந்த அதிமுக ஆட்சியின்போது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தார் வேலுமணி. அப்போது சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில் பணிகள் மேற்கொள்ள டெண்டர் வழங்கியதில் சுமார் 98.25 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்துள்ளதாக வேலுமணி உள்ளிட்ட சிலருக்கு எதிராக பிற்காலத்தில் வழக்கு பதிவானது.

இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும்படி பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை' என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எதிராக, அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கானது கடந்த செப்டம்பர் 16ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது வீடியோ கான்ஃபரன்ஸ் வாயிலாக மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை சார்பு செகரட்டரியான சுஷில்குமார் படே ஆஜரானார். அவரிடம் 'இந்த வழக்கின் முக்கிய செயல்பாடான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கந்தசாமி, விஜயகார்த்திகேயனுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி வழங்க ஏன் இவ்வளவு காலதாமதம்? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு சுஷில்குமார், 'வழக்கு ஆவணங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளதால், அவற்றை ஆய்வு செய்ய அவகாசம் தேவை. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திடம் அவை அனுப்பப்பட்டுள்ளன. ஆணையம் அளிக்கும் பதில் இன்னும் சில நாட்களில் கிடைக்கும். அதன்பின் அந்த ஆவணங்கள் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். வழக்குத் தொடர அனுமதியளிக்கும் அதிகாரமானது பிரதமர் அலுவலகத்துக்கே உள்ளது.

இந்த நடைமுறைகள் முடிவடைய இரண்டு மாதங்களாகும். அதன்பின் எந்த காலதாமதமும் ஏற்படாது என்று கூறியிருக்கிறார். இந்த விளக்கத்தை ஏற்ற நீதிபதி, 'இந்த விவகாரத்தில் 2025 2025 நவம்பர் முதல் தற்போது வரையில் மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளை விளக்கி, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். ஐ.ஏ.எஸ். தொடர அனுமதி வழங்கும் நடைமுறையை முடித்து, அந்த அரசு தெரிவிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளார்.

2018ல் கோடி அறப்போர் இயக்கம் இதில் முதல் புகாரை தொடுத்தது. அப்போது அரசு உயரதிகாரிகளாக இருந்த கந்தசாமி மற்றும் விஜயகார்த்திகேயன் ஆகியோர் மீதும் அவ்வியக்கம் புகார்களை வைத்தது. இப்புகார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி 2021ல் எஃப்.ஐ.ஆர். மீண்டும் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது.

தொடர்ந்து புதிதாக அமைந்த தி.மு.க. ஆட்சியும் இவ்வழக்கை வைத்து வேலுமணி மீது துவக்கத்தில் கடும் பாய்ச்சல் காட்டியது. அரசியல் ரீதியாகவும் பெரிதாய் எதிர்பார்க்கப்பட்ட இவ்வழக்கானது திடீரென ஆமை வேகத்தில் மூவ் ஆக ஆரம்பித்த நிலையில் தான் அறப்போர் இயக்கம் ஐகோர்ட்டை நாடியது. அடுத்தடுத்து நகர்வுகள் வேகமெடுத்துதான் இப்போது இந்த லெவலில் வந்து நிற்கின்றன.

உட்கட்சி குழப்பங்களால் அதிமுக மளமளவென சரிவை சந்தித்ததும் வேலுமணிக்கு பெரும் சறுக்கலானது. அந்த சூழ்நிலையில்தான், இவ்வழக்கின் போக்கும். அதன் லகானும் பிரதமர் மோடி அலுவலகத்தின் கைகளில்தான் இருக்கும் என்று வேலுமணியின் வழக்கறிஞர் டீம் அழுத்தமாக சுட்டிக் காட்டியிருந்தது. அதனால்தான், அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி முறிந்த பின்னும் கூட பா.ஜ.க.வோடு நெருக்கமான நட்பில் இருந்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் கூட்டணி உருவாகவும் காரணமாக அமைந்தார்.

ஆனால், தேர்தலில் அக்கூட்டணி தோற்று, தவெக ஆட்சி அமைத்தது. த.வெ.க. உடனே வேலுமணி ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். தனக்கு எதிரான முறைகேடு புகார் நடவடிக்கைகளில் தமிழக அரசின் கையும் வலுவாக இருக்கும் என்பதால்தான் முதல்வர் விஜய்க்கு சாதகமான திசையிலேயே வேலுமணி நடமாடுகிறார். அதாவது, மத்திய அரசு, மாநில அரசு என இரு தரப்பையுமே அட்ஜஸ்ட் செய்தே அரசியலை நகர்த்தி வருகிறார். இவ்வழக்கின் முக்கிய முகங்களான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது வழக்கு பதியும் விஷயத்தில் பிரதமர் அலுவலகம் எடுக்கும் முடிவுதான் இவ்வழக்கின் போக்கை முடிவு செய்யவிருக்கிறது என சொல்லி முடித்தனர்.

இதுகுறித்து அறப்போர் இயக்க நிர்வாகிகளிடம் பேசினோம். இவ்வழக்கில் நீதியை பார்க்கும் வரையில் நாங்கள் ஓயமாட்டோம். மக்கள் பணத்தில் கை வைத்தவர்களை உண்மையிலேயே நாங்கள் விட்டுவைக்க மாட்டோம்' என்றார்கள்.

வேலுமணியிடம் இதுபற்றி கேட்டபோது, 'என் கரங்களில் எந்த ஊழல் அழுக்கும் கிடையாது. மக்களுக்கான மனுஷன் நான். எளியவனான நான் சட்டத்தை முழுமையாக நம்புகிறேன். அது எனக்கு பாதுகாப்பாக இருக்கும்" என்றார்.

காலம் பதில் சொல்லும்!

(குமுதம் செய்திகளுக்காக எஸ்.ஷக்தி)