📅 Friday, 14 August 2026 IST | ஆடி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 13, 2026 12:04 PM

மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஆசிரியை மீது தாக்குதல்

மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஆசிரியை மீது தாக்குதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியை மீது மதுபோதையில் தவெக பிரமுகர் தாக்குதல் நடத்தி செல்போனை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே நாடுகண்டனூர் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வருபவர் ஜெயலட்சுமி (40). இவர் நேற்று முன்தினம் மாலை லட்சுமணபுரம் கிராமப் பகுதியில் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது பாலமுருகன் (37) என்பவரது வீட்டுக்குச் சென்று மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த விவரங்களைக் கேட்டுள்ளார். அதற்கு தவெக பிரமுகர் பாலமுருகன், “எதற்காக இந்த விவரங்களை கேட்கிறீர்கள், நான் ஆளுங்கட்சிக்காரன், என்னிடமே எங்களைப் பற்றி விசாரிக்கிறீர்களா?” என கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.

இதையடுத்து ஆசிரியை ஜெயலட்சுமி, அவரிடம் அரசு சொல்லித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிக்கு வந்துள்ளேன் என்று தெரிவித்து தன்னுடைய அடையாள அட்டையைக் காட்டி விவரங்களை சொல்லும்படி கேட்டுள்ளார். ஆனால், பாலமுருகன் மதுபோதையில் இருந்ததால் ஆசிரியை சொன்ன எதையும் பொருட்படுத்தாமல் அவரிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில் ஆசிரியை ஜெயலட்சுமியின் செல்போனை திடீரென பறித்தார். மேலும், அவரது முகத்தில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ஆசிரியைக்கு முகத்தில் ரத்த காயமும், முதுகில் உள் காயமும் ஏற்பட்டது. இதையடுத்து ஆசிரியை ஜெயலட்சுமி உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸார் விசாரணை

தகவலறிந்த திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் வழக்குப் பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தார். அப்போது போலீஸாரிடம், பாலமுருகன், “நான் தவெக கட்சிக்காரன், என்னையவே கைது செய்கிறீர்களா?” என தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட தவெக நிர்வாகிகளிடம் கேட்ட போது, அவர், தவெகவில் நிர்வாக பொறுப்பில் இல்லை என்றனர்.

ஆசிரியர் சங்கம் கண்டனம்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் முருகன் கூறுகையில், “ஆசிரியை மீது தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. கணக்கெடுப்பு குறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணம். சொந்த வீடு உள்ளது என்பது போன்ற உண்மையான விவரங்களை சொல்லிவிட்டால் நமக்கு ரேஷன்பொருட்கள் வழங்கப்பட மாட்டாது. உரிமைத்தொகை 1,000 ரூபாயை நிறுத்திவிடுவார்களோ என்ற அச்சம் மக்களிடம்உள்ளது. அதனாலே, இது போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கின்றன.

தாக்கியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்குப் போதிய விழிப்புணர்வை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் ஆசிரியர்கள் அச்சமின்றி களத்தில் பணியாற்ற முடியும்’’ என்றார்.