மகளிர் இலவச பயண திட்டம் விரிவாக்கம்; தனியார் பஸ் உரிமையாளர்கள் கலக்கம்
சென்னை: அரசு பஸ்களில், மகளிர் இலவச பயண திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு, தனியார் பஸ் உரிமையாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
த.வெ.க., தேர்தல் அறிக்கையில், 'அனைத்து அரசு பஸ்களிலும், மகளிர் இலவச பயண திட்டம் செயல்படுத்தப்படும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதை செயல்படுத்தும் விதமாக, 'மாநகரம் மற்றும் நகரப்பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண, சொகுசு பஸ்களிலும், மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ளும் புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் சாதாரண கட்டண பஸ்களிலும், மகளிர் இலவசமாக பயணம் செய்யலாம்' என, முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இந்த விரிவாக்க திட்டத்தால், தனியார் பஸ்களில், பெண் பயணியரின் எண்ணிக்கை முற்றிலும் குறைந்து விடும் எனக் கூறி, தனியார் பஸ் ஊழியர்கள், சேலம் உட்பட பல்வேறு இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து, தனியார் பஸ் உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது: தமிழகத்தில், 4,600 தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. 2018ம் ஆண்டுக்கு பின், தனியார் பஸ் கட்டணம் மாற்றிய அமைக்கப்படவில்லை.
கடந்த 2018ல், லிட்டர் டீசல் விலை 63 ரூபாய். தற்போது, 100 ரூபாயாக உள்ளது. உதிரி பாகங்களின் விலை உயர்வு, மகளிர் இலவச பயணம் திட்டம் ஆகியவற்றால், தனியார் பஸ்களை, 70 சதவீத வழித்தடங்களில் இழப்பில் தான் இயக்கி வருகிறோம்.
பஸ் கட்டணம் உயர்வு தொடர்பாக, நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையையும், தமிழக அரசு இன்னும் இறுதி செய்யாமல் இருப்பது கவலை அளிக்கிறது.
அதேநேரம் எங்கள் இழப்பை ஈடு செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது மகளிர் இலவச பயண திட்டத்தை, தனியார் பஸ்களிலும் செயல்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படிச் செய்யும் போதுதான், கட்டண இழப்பீடை அரசிடம் இருந்து பெற முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.